Monday, 5 March 2018

காதலைச் சொல்

எப்படிச் சொல்வாய்
என்று கேட்கிறாய்.

மண்டியிட்டு
மலர்க்கொத்து
கொடுத்தா?

கவிதையாகக்
கடிதம் எழுதியா?

மெளனமாகப்
பார்வையினால்
மட்டுமா?

அவ்வாறு காதலைச்
சொன்னவர்கள்
என்னை மன்னிப்பாராக.

கடிதங்களில் உள்ளவை
நான் பேசாத வரை
உயிரற்ற எழுத்துக்கள்
மட்டுமே.

மலர்க் கொத்துக்கள்
எல்லாம்
உன் ஸ்பரிசம்
படாத வரை
மக்கிய குப்பைகள்
மட்டுமே.

வெற்றுப் பார்வைகளால்
என் அன்பை
மொழிபெயர்த்து விட
முடியுமோ என்ன?

இல்லவே இல்லை.

என் மொழியும்
அது விதைக்கும்
எண்ணங்களும்
தனித்தவை.

எனக்காக நீ
தனித்தும் தவித்தும்
காத்திருக்கும்
ஒரு பொன்
பொழுதில்,
உன்னருகில் வந்து,
காற்றுப் புகாத
இடைவெளி விட்டு,
உன் சில்லிட்ட
மென் விரல்களைக்
கோர்த்தபடி,
இடையோடு
உன்னைச் சேர்த்து
ஒரு கை இடை தாங்க
மறு கரமோ
பிடரியில் பயணித்து
சார்த்தியிருக்கும்
உன் விழிகளைத்
தாங்கிய உன்
தலையை உயர்த்தி
செவி மடல்களை
வருடியபடி
உன் செவிகளில்
நமக்கான அந்தக்
கவிதையை
மெலிதான குரலில்
என் அன்பெல்லாம்
வழித்துத் திரட்டி
நான்
சொல்லச் சொல்ல
பஞ்சினும் மெலிதான
உன்னிரு
நெஞ்சகங்களைத்
தாண்டி உன் இதயம்
உரக்கத் துடிக்கும்
ஓசையே
திரிபுடத் தாளமாக,
உன் இதழ்கள்
துடித்து, நடுங்கி
அடங்க உந்தன்
செவ்விதழ்களை
என் உதடுகள்
கொண்டு நான்
பற்றியிழுத்து
ஆழமாய் ஒரு
முத்தம் பதிக்கும் போது
என்னையும் முந்தி
உன் இருதயம்
என் காதில்
உந்தன் காதலை
அழுந்தச் சொல்லும்
அந்தத்  தருணத்தில்
நானும் என் காதலை
செவ்வனே சொல்லி முடித்திருப்பேன்.

காதலைச் சொல்லும்
வழி முத்தமே.
இல்லை இல்லை..
முத்தங்களே.....

No comments:

Post a Comment