மருத்துவர் வேறு
என்ன சொல்லியிருந்தாலும்
நான் இவ்வளவு
கலங்கியிருக்க மாட்டேன்.
என் கால்களுக்கு
கொஞ்சம் ஓய்வு
கொடுக்கச் சொல்லிவிட்டார்.
கால்களை
இரண்டாவது இதயம்
என்கின்றார்.
என் செய்வேன்!
மூளையைவிட
நான் அதிகம்
பயன்படுத்துவது
என் கால்களை
அல்லவா!
இருதயத்தைவிட
நான் அதிகம் மதிப்பது
பாதங்களை அல்லவா!
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
மூளையைச் செதுக்கும்
உளிகளின் தெறி
அல்லவா!
என் பார்வையின்
வீச்சு அதிகமாவது
பாதங்கள்
தரையை அளாவும்
போது தானே.
என் நுரையீரல்
அதிகம் காற்றை
நிறைப்பது
பயணங்களின்
போது தானே.
பாதையின் தூரம்
அதிகமாகும்
தருணமெல்லாம்
என் மனதின்
கொள்ளளவு விரியாதா?
பயணத்தின்
எல்லைகளை என் கால்கள்
விஸ்தரிக்கையில்
என் உலகம் தானாகவே
விசாலமடைகிறதே.
கால்களுக்கு ஓய்வு
என்பது என் சிந்தனைக்கு
வேகத்தடையன்றோ?
அது கற்பனைக்
குதிரைகளுக்கு
நான் இடும்
கடிவாளம் அன்றோ?
எச்சரிக்கைகளை மீறி
நூறடி கடந்தேன்.
என் பாதங்கள்
மூளையிடம் கெஞ்சின.
என் மனமோ
இரக்கம் இன்றி
கோரிக்கையை
ஏற்க மறுத்துவிட்டது.
இப்படியாக
மனதிற்கும்
மூளைக்குமான
முரண்பாடுகளில்
நகர்கிறது நாட்கள்.
ஆனாலும்
வானத்தை வாசிக்கவும்,
காற்றோடு களிக்கவும்,
நிலாவோடு உலாவவும்,
நட்சத்திரங்களோடு நடக்கவும்,
அந்திவானைச் சந்திக்கவும்
அனு தினமும்
நடந்தாக வேண்டும் எனக்கு.
கால்களே,
சற்று இளைப்பாறுங்கள்.
ஒரு சிறிய
மருத்துவ இடைவேளைக்குப்
பிறகு லாடங்கள்
மாட்டிக்கொண்டாவது
நாம் தொடர்வோம்.
No comments:
Post a Comment