இந்தக் கதையைப் படித்த உடன் உங்களுக்கு என்ன தோன்றியது?
கதைக்குள் ஒரு கதையாக நான் இதைப் படித்தேன்.
------------------
ஒரு சிற்றூர். அழகானது.
அங்கே ஒரு ஏரி. அதுவும் அழகானது.
அவ்வூரில் ஒரு இளைஞன். அவனும் அழகானவன். மிகவும்.
தன் எழில்மிகு தோற்றத்தின் மீது அவனுக்குத் தணியாத மோகம் உண்டு.
அனுதினமும் அவன் அந்த ஏரிக்கரையில் மண்டியிட்டு அமர்ந்து சலனமற்ற அதன் தண்ணீரில் தன் வடிவைப் பார்த்து ரசித்து வந்தான்.
ஒரு நாள் அவ்வாறு தன் அழகைத் தானே ரசித்துக் கொண்டிருக்கும் போது ஏரியில் தவறி விழுந்து, முழுகி இறந்துவிட்டான்.
அங்கு உலா வந்த வன தேவதை அது வரை ருசியான குடிநீராக இருந்த அந்த ஏரி திடீரென கரித்துக்கொட்டும் உப்புத் தண்ணீராக மாறிவிட்டதை அறிந்தாள்.
ஏரியிடம் கேட்டாள்;
' ஏன் அழுது கொண்டே இருக்கிறாய்? உன் கண்ணீரினால் உன் உதிரம் கரிக்கிறதே...'
ஏரி விசும்பியபடி சொன்னது:
'அந்த இளைஞனின் மரணம் என்னைத் தீவிரமாகப் பாதிக்கிறதே...நான் அழாமல் என்ன செய்ய?'
வன தேவதை சொன்னாள்:
'அட, பரவாயில்லையே, காட்டில் உள்ள நாங்கள் ரசிக்காத அவனது வனப்பை நீ மட்டும் நயந்தும் வியந்தும் ரசித்திருக்கிறாயே.... உன் துக்கம் அர்த்தமுள்ளது தான்'
' என்னது, அவன் அவ்வளவு அழகாகவா இருந்தான்?' என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டது ஏரி.
'அவன் அழகைப் பற்றி உன்னைவிட வேறு யார் அறிவார்?
தினந்தோறும் உன் கரைகளில் அமர்ந்து உன்னில் பார்த்துத் தானே அவன் தன் அழகை ரசித்து வந்தான்!' என்றாள் வன தேவதை.
ஏரி ஒரு நீண்ட மெளனத்தில் ஆழ்ந்தது. பின் சொன்னது:
'அவனுக்காகத் தான் அழுதேன். உண்மைதான்... ஆனால் ஒருநாளும் நான் அவனது அழகைப் பார்த்து ரசித்தது இல்லை'
வன மகள் அதிர்ச்சி அடைந்தாள். ஏரியைக் கேட்டாள்:
'அவனிடம் வேறு என்ன தான் பார்த்தாய்?
ஏரி சொன்னது;
'ஒவ்வொரு முறையும் அவன் என் கரை மீது மண்டியிட்டு அமர்ந்து என்னைப் பார்த்த போதொல்லாம்
அவனது கண்களில் வழியே பிரதிபலித்த என் அழகையல்லவா அல்லவா நான் ரசித்தேன்?'
அந்த ஏரியில் இப்போது எந்தச் சலனமும் இல்லை.
No comments:
Post a Comment