அத்தனை பெரிய வீட்டுக்கு
வாயிற்சுவர் சிறியது.
அத்தனை பெரிய சுவருக்கு
நிலைக் கதவு சிறியது.
அத்தனை அகலக் கதவுக்கு
பூட்டு சிறியது.
அத்தனை பெரிய பூட்டுக்கு
சாவி சிறியது.
பெரிய வீட்டுக்கு
சின்னதொரு
சாவியால் வழி தர
முடியும் என்றால்
மிகப் பெரிய
சோதனைகளுக்கு
தீர்வு தர
சிறியதொரு மூளையால்
முடியாதா?
சாவியின் அளவைப் பாராதே.
அதன் திறனைப் பார்.
ஊசியின் துளியளவு
காதுகளைக் கடந்து
செல்லும்
மெலிதான நூல் தானே
ஆடைகளைத் தைக்கிறது!
அத்தனே ஏன்,
நீயே
ஒரு சிறு துளி
உயிரணுவில் இருந்து
பிறந்தவன் தானே.
உன் உயிரை நீயே
மாய்த்துக் கொள்ளும்
வழிகளை
கை கொண்டு
எண்ணிப் பார்த்தால்
விரல்கள் மீதி இருக்கும்.
ஆனால்
வானத்தின் கீழே
வாழ்வதற்கு உள்ள
எண்ணற்ற வழிகளி்ல்
ஒன்று கூடவா
உனக்கென இல்லை?
முடியும் என்றால்
பயிற்சி செய்.
முடியாத போது
முயற்சி செய்.
ஒன்றை மட்டும்
மனதில் நிறுத்து.
முயல் ஜெயிக்கும்.
ஆமை கூட ஜெயிக்கலாம்.
ஆனால் முயலாமை?
No comments:
Post a Comment