ஒரு
சந்தேகம் எழுந்தது.
என்
உறக்கம் தொலைந்தது.
சந்தோஷம் என்றால்
என்ன?
மனைவியைக்
கேட்டேன்.
கவலையற்று இருப்பதே
மகிழ்ச்சி என்றாள்.
நண்பனைக் கேட்டேன்.
பிடித்ததைச் செய்தல்
மகிழ்ச்சி என்றான்.
மகளைக் கேட்டேன்.
நலமான வாழ்வே
சந்தோஷம் என்றாள்.
தோழியைக் கேட்டேன்.
நாம் நாமாகவே இருத்தல்
மகிழ்ச்சியாம் என்றாள்.
காதலரைக் கேட்டேன்.
உள்ளங்கவர் கள்வரை
கடிமணம் புரிவது
என்றும் ஆனந்தம்
என்றார்.
பெரியவர்களைக் கேட்டேன்.
முதியோர் இல்லம்
புகாதிருத்தல் செளக்கியம்
என்றார்.
இளைஞரைக் கேட்டேன்.
மகிழ்ச்சி என்பது
வீடு, வேலை, பணம்
என்றார்.
குழந்தைகளைக் கேட்டேன்.
பலூன், ஐஸ்கிரீம், சாக்கலெட்
தவிர
பள்ளிக்கு விடுமுறையும்
செம ஜாலி என்றனர்.
ஆனாலும்
எந்தப் பதிலிலும்
உடன்பாடில்லை
எனக்கு.
அதிகாலையில்
இலக்கின்றி நடைபோட்டுக்
கிளம்பினேன்.
எங்கெங்கோ சென்றேன்.
அலைந்து திரிந்தேன்.
பறவைகளைச்
சந்தித்தேன்.
விலங்குகளைக்
கவனித்தேன்.
அருவியில் குளித்தேன்.
வெயிலில் ஓடினேன்.
தொடுவானம் தேடினேன்.
இயற்கையை ரசித்தேன்.
சுனை நீரைப் பருகினேன்.
பழம் கொத்தித் தின்றேன்.
வானத்தை விழிகளாலும்
பூமியைக் கால்களாலும் அளந்தேன்.
ஆனாலும்
மகிழ்ச்சி என்றால்
என்னவென்று
கிஞ்சித்தும் புரியவில்லை.
இருள் வந்தது.
பயம் வந்தது.
வலி வந்தது.
களைத்திருந்தேன்.
வீடு திரும்பினேன்.
வயிறாரப் புசித்தேன்.
கால்நீட்டி அமர்ந்தேன்.
மனம்விட்டுப் பேசினேன்.
நிம்மதியாகத் தூங்கினேன்.
என்னவோ தெரியவில்லை,
சந்தோஷமாய்
இருந்தது.
No comments:
Post a Comment