Friday, 30 March 2018

நிலாவின் வானவில்

சொன்ன இடத்தில்
ஏறிக்கொண்டாள்.

'எங்கேயாவது
பரந்த வெளியில்
மலைகளையும்
பெளர்ணமியையும்
பார்க்க வேண்டும்,
உன்னோடு'

நகரைத் தாண்டிய
நால் வழிச் சாலையில்
அந்தப் பாலத்தின்
மத்தியில் வாகனத்தை
நிறுத்தி இறங்கினோம்.

நான்கைந்து அடுக்குகளாய்
நீண்டிருந்த அந்த
மலைத் தொடரின்
ஒவ்வொரு மலையும்
கருமையின் வெவ்வேறு
சாயல்களில் காட்சி தர,
அமைதியாய்
அதன் முகடுகளில்
முழுநிலவு ஆர்ப்பரிக்காது
எழும்பி வந்தது.

விழி விரியப் பார்த்தாள்.
விழி வெளிப் படலம்
பனித்திருக்கப் பார்த்தாள்.
இருள் கவியும் வரை
பார்த்தாள்.

திரும்பினோம்.
வாகனம் வழுக்கி
முன் செல்ல
சாலையில் மற்ற எல்லாமே
விரைந்து பின் சென்றன.
எண்ணங்களைப் போல.

மனதில் உதித்த
வார்த்தைகளை
உதடுகள் உச்சரிக்காமல்
இதயம் தடுத்திருந்தது.

'எப்படி இருக்கிறாய்?'
என்று கேட்க நினைத்து
'எப்படி இருக்கிறது வாழ்க்கை?'
என்று கேட்டு வைத்தேன்.

'இருக்கேன்' என்ற
அவளின் குரல்
உண்மையில்
இரு வரிக் குறள்.

சிந்தனை
வயப்பட்டிருந்தாள்.
மத்யமக் களை
படிந்திருந்தாள்.

'நிலா அழகு
இல்லையா? என்ற
என்னிடம்
'பெளர்ணமிக்கு
வானவில் இருந்தால்?'
என்றாள்.

'உண்மையில்
அது வானவில்லா என்ன?
மழைவில் தானே!'
என்றேன் நான்.

'அது சரி,
உன் கவிதை தான்
நினைவுக்கு வருகிறது'
என்றதோடு நில்லாது
'ராத்திரியில் பெய்யும்
மழைக்கு ஏது வானவில்?'
என்று அதை 
முணுமுணுத்தாள்.

உணவகத்தில்
பழச்சாறு அருந்திய
பொழுதிலும்
உள்ளத்து இரைச்சலை
மெளனம் சிந்தி
மொழிபெயர்த்தாள்.

பாதி வழியில்
சாலை வளைவில்
கண்ணாடிக்கு எதிரே
நிலா நின்று
அழகு காட்டிய போது
வாகனத்தை
நிறுத்த முயன்றேன்.

'நேரம் இல்லை'
என்ற அவளது சொல்லில்
ஒரு தாயின் த்வனி
இருந்தது.

சொன்ன இடத்தில்
இறங்கிக் கொண்டாள்.

மரங்களுக்கு நடுவிலும்
மேகங்களுக்கு இடையிலும்
விட்டு விட்டு கண்ணாமூச்சி
ஆடியபடி தொடர்ந்து
வந்து கொண்டிருந்த
அந்த நிலா
நகர எல்லைக்குள்
நான் நுழைந்தவுடன்
கான்கிரீட் குவியல்களுக்குப்
பின்னால் சிக்கி
மறைந்து போனது.

கூடுகள்
என்னை
எதிர்கொண்டன.

No comments:

Post a Comment