முருகன் டிராவல்ஸ்
நேபாள் யாத்திரையில்
கூட வந்த
அவருக்கு அறுபதும்
அவர் மனைவிக்கு
55ம் இருக்கும்.
ஒரு கணவன் சதா
கத்திக்கொண்டும்
ஒரு மனைவி சதா
கேட்டுக்கொண்டும்
இருக்க முடியுமா
என்றால்
அங்கே அதுதான் நடந்தது.
அவருக்கு
உமிழ்நீருக்குப் பதிலாக
வாய் முழுக்கத்
திராவகம் போலும்.
எதைச் செய்தாலும் குறை.
என்ன பேசினாலும் குற்றம்.
நெற்றிக் கண்
இல்லாத குறை.
தான் மட்டுமே
யோக்கியம் எனவும்
தன் மனைவி
சர்வ முட்டாள் எனவும்
தீர்மானமாய் நம்பும்
ஆண்.
கல்லோ, புல்லோ
எதுவானாலும்
வாய்த்த கணவனே உலகம்
என்று உழலும் பெண்.
எந்தப் பாவி மகன்
இருவருக்கும்
ஜோடிப் பொருத்தம்
பார்த்தானோ?
அந்த கணவன் பிறவி
எனக்கு இரண்யன்
போலத் தோன்றியது.
அவமானத்தை
விழுங்கி
பெண் நீலகண்டனாகி
செயற்கையாகச்
சிரிப்பை ஏந்தியிருந்த
அவருக்காக
எல்லாரும் கடவுளைச் சபித்தோம்.
யாத்திரை முடியப் போகிற
கடைசி நேரங்களில்
தாளாது போனது மனம்.
அருகில் மெல்லச் சென்று
தாழ்ந்த குரலில் கேட்டேன்.
'இந்த நரகத்தைச் சகிக்க
என்ன தான் காரணம்?'
வறண்டிருந்த கண்களால்
என்னைப் பார்த்தார்.
'மொத்தம் ஆறு' என்றார்.
'என்னது?' என்று
நெற்றி சுருக்கிக் கேட்டேன்.
புடவைத் தலைப்பால்
கண்ணைத் துடைத்துக்
கொண்டார்.
ஜன்னல் கம்பியில்
பார்வையைப்
புதைத்துக் கொண்டார்.
பின்பு சொன்னார்.
'குழந்தைகள்'.
No comments:
Post a Comment