போன வருடம். மதுரை அண்ணா நகர் மாஸ்டர் பேக்கரி வழியாக பிரதான சாலைக்கு அருகில் கார் ஓட்டி வந்தேன். இடது புறமாகத் திரும்ப எத்தனிக்கையில் மிக முக்கியமான அழைப்பு. செல்லிடப்பேசிக்கும் கார் ஸ்பீக்கருக்குமான ப்ளூ டூத் இணைப்பு அப்போது செயல்படவில்லை.
இரத்த வங்கி குறித்த அவசர அழைப்பு என்பதால் நான் அவ்வழைப்பைத் தவிர்க்கவில்லை.
அழைப்பை ஏற்று பேசியபடியே வாகனத்தை ஒரு கையால் இயக்கினேன்.
என் மீது தவறு தான்.
என் மீது தான் தவறு.
சாலையில் இருந்த காவலர் ஒருவர் வாகனத்தை நிறுத்தச் சொல்லி சமிக்ஞை செய்ததையும் நான் கவனிக்கவில்லை. அதைக் கவனிக்கச்சொல்லி என் மனைவி சொன்னதையும் நான் கவனிக்கவில்லை. திருப்பத்தில் வாகனம் வேகம் குறைகையில்
அக் காவலர் ஓங்கி என் கார் ஜன்னல் கண்ணாடியைத் தட்டினார். எனக்கு ஆத்திரமோ ஆத்திரம். காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கி ஏதோ கோபமாக அவரைக் கேட்க நினைக்கை சட்டென எனக்கு நினைவு வந்தது. தவறிழைத்தது நான் தானே, அவருடையது எதிர்வினை தானே!
என்னைக் கடிந்து கொள்ளவோ அபராதம் விதிக்கவோ உரிமை கொண்ட அக் காவலரோ என் காரில் ஒட்டியிருந்த வழக்கறிஞர் ஸ்டிக்கரைப் பார்த்தார். என்னைப் பார்த்தார். எதிரே மாடியில் ஒரு வக்கீல் அலுவலகம் வேறு இருந்தது. அதையும் பார்த்தார்.
'ஓ, வக்கீலா, போங்க போங்க, உங்களை எல்லாம் யார் கேட்கறது? என்று முணுமுணுத்த படி என்னை போகச்சொன்னார். நான் தவறை உணர்ந்தவனாக 'ஐம் சாரி' அபராதம் கட்டவா?' என்றேன். அவ்வளவுதான்.
'சார், ஆளை விடுங்க சார், போங்க சார்' என்று அவர் கெஞ்சாத குறையாக கை கூப்பி எங்களை அனுப்பி வைத்ததில் மரியாதை இல்லை, மாறாக வக்கீலாயிற்றே நமக்கு எதற்கு வம்பு என்ற வெறுப்பு தான் இருந்தது.
நான் கூனிக் குறுகிப் போனது உண்மை.
பிறகு மே மாதம் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு நாங்கள் சுற்றுலா சென்றோம். பாலக்காடு வரை நானே கார் ஓட்டவும் நண்பர் ஏற்பாடு செய்த ஓட்டுநர் மூலம் அதன்பின் மானந்தவாடி வரை பயணம் செய்வதாகவும் ஏற்பாடு. கேரள மாநில எல்லை நுழைந்ததும் ஒரு காவல் சோதனைச் சாவடியில் எனது வாகனத்தை நிறுத்தச் சொன்னார்கள். நிறுத்தினேன்.
ஒன்று சொல்லியாக வேண்டும். அம்மாநில காவல் துறை அங்கு சுற்றுலா வருபவர்களை மரியாதையுடன் அணுகுகிறார்கள்.
ஒருவர் என் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டச் சொன்னார். கொடுத்தேன்.
'பாண்டி நாடா?' கேட்டார்.
'இல்லை தமிழ்.' சொன்னேன்.
'நான் கேட்டது லைசன்ஸ்.' சொன்னார்.
'நான் கொடுத்தது லைசன்ஸ்'. சொன்னேன்.
'இதுவா லைசன்ஸ்?' கேட்டார்.
'எனக்கு இதைத்தான் லைசன்ஸ் என்று கொடுத்தார்கள். உங்களுக்கு தனிச்சட்டமா?' கேட்டேன்.
தமிழ் நாட்டில் சிவகங்கை மற்றும் நீலகிரி போன்ற சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் ஓட்டுநர் உரிமமும் பதிவுச் சான்றிதழும் கையடக்க ஸ்மார்ட் கார்டாக தரப்படுகிறது என்ற விவரம் அவர்களுக்குத் தெரியாது என்ற விவரம் எனக்குத் தெரியாது. என்னுடைய ஓட்டுநர் உரிமம் சிவகங்கையில் தரப்பட்ட ஒன்று.
அக் காவலர் காரில் உள்ள ஸ்டிக்கரைப் பார்த்தார். ஏற இறங்க என்னையும் ஒரு பார்வை பார்த்தார். அவரது உயர் அதிகாரியை அழைத்தார்.
'வக்கீல் சார் லைசன்ஸ் கேட்டா தரலாமே.' அவர் சொல்ல, 'அது தான் இது' நான் சொல்ல, அவரும் ஸ்டிக்கரைப் பார்த்தார்.
தந்தி டிவியில் ரங்கராஜ் பாண்டேவிடம் பழ. கருப்பையா சொன்னது மாதிரி இருவரும் என்னிடம் 'போங்க போங்க' என்று சொல்லிவிட்டார்கள்.
என்ன, கேரளா போலிசுக்கு ஸ்மார்ட் கார்ட் வகுப்பு எடுக்கும் வாய்ப்பை அன்று அநியாயமாக இழந்தேன் என்பது கொசுறு வருத்தம்.
அந்த உரிமத்தை வாங்கிப் பார்த்துவிட்டு திடீரென என் மகள் சொன்னாள், இல்லை, இல்லை, கத்தினாள்....
'அப்பா, லைசன்ஸ் டைம் முடிஞ்சு போச்சே, ரிந்யு பண்ணலையா?'
அதைக் கேட்டு நான் சொன்ன 'what?'ல் ஒரு ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சி இருந்திருக்கும். அங்கேயை வண்டியை நிறுத்தி விட்டு ட்ரைவருக்காக காத்திருக்கும் போது லைசன்ஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பற்றி நான் வாய் கிழியப் பேசிய வாதங்கள் எல்லாம் என்னைக் குத்திக் கிழித்தன. அந்த நிமிடத்திலிருந்து திரும்ப வீடு வரும் வரை நான் வாகனத்தை ஓட்டவில்லை. பயணம் முழுவதும் ட்ரைவர் தான். ஊருக்கு வந்தவுடன் நான் செய்த முதல் காரியம் அந்த உரிமத்தைப் புதுப்பித்தது தான்.
அந்தக் காவலர்களுக்கு மட்டும் அந்த ஸ்மார்ட் கார்டு லைசன்ஸைப் புரிந்து கொள்ளத் தெரிந்திருந்தால்?
'நாற்பத்தி நான்கு' என்பது 'நாற்பத்து ஐந்து' ஆயிருக்குமோ?
அதோடு முடிந்ததா?
இல்லையே.....
போன மாதம் மதுரை-சிவகங்கை சாலையில் விக்ரம் மருத்துவமனை எதிரில் என் கார் சின்னதாக ஒரு விபத்துக்குள்ளாகி காரின் வலது இடது முன் பக்கம் சேதமானது.
ஒரு காவலர் வந்தார். ஸ்டிக்கரைப் பார்த்தார். என்னைப் பார்த்தார். என் மீது மோதிய ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டியவனையும் மோட்டார் சைக்கிள் ஓட்டியையும் பார்த்தார்.
"ஓ, வக்கீலா...போங்க சார்..."
No comments:
Post a Comment