திருமணத்தில் முடியும் காதல் மட்டுமே நம் நாட்டில் வெற்றி அடையும் காதலாக உணரப்பட்டு வருகிறது. எனவே காதல் திருமணம் என்பது ஒரு வித்தியாசமான அனுபவம் தான். குடும்பத்தார் சம்மதமின்றி காதல் துணையைக் கரம் பற்றி கடைசிவரை தனியே சுகமாக வாழ்ந்து காட்டியவர்கள் நிறைய பேர் உண்டு. திருமணத்திற்கு பின் தமது குடும்பத்தாருடன் சமாதானமாகப் போனவர்களும் நிறைய உண்டு. அன்றி அதில் தோற்றவர்களும் நிறைய உண்டு.
காதல் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது அன்பு மட்டுமன்றி நிறைய பிற சங்கதிகளும் இங்கு ஏனோ முக்கியமாகி விட்டன. அதில் முக்கியமானது பொருளாதாரம். பலருக்கு இங்கு 'பொருளே' தாரம் என்பது வேறு கதை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் பதிவுத் திருமணங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. திருமணம் என்பதை நம் நாட்டுச் சட்டங்கள் இரண்டு வகையாகப் பார்க்கின்றன. முதலாவது அவரவர் மதம் சார்ந்த திருமணச் சட்டம். இருவரும் அந்த மதம் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். மாற்று மதத்தவரை ஒருவர் மணம்புரிய வேண்டும் என்றால் அதற்கு சிறப்புத் திருமணச் சட்டம் என்ற தனி சட்டமிருக்கிறது. அச் சட்டத்தின் கீழ் நடத்திக்கொள்ளப்படும் திருமணங்கள் பதிவுத் திருமணம் எனப்படும். இந்து திருமணச் சட்டத்தில் தமிழ்நாட்டுக்குப் பொருந்தக் கூடியதாக ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு அதன் படி வைதீக சடங்குகள் அற்ற சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டன.
பல தருணங்களில் சாமான்யமனிதரால் சட்டங்கள் சரியாகப் புரிந்து கொள்ளப் படுவதில்லை. திருமணப் பதிவு என்பது வேறு. பதிவுத் திருமணம் என்பது வேறு. இரு வேறு மதத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது ஒரே மதத்தைச் சேர்ந்தவர்களோ உறவினர் சம்மதமின்றி செய்து கொள்ளும் (காதல்) திருமணங்களில் சமயச் சடங்குகள் ஏதும் அவசியமில்லை. பதிவாளர் அலுவலகத்தில் தகுதி வயது மற்றும் முகவரிச் சான்று சமர்ப்பித்து ஆட்சேபணை கோரிய கால அவகாசம் முடிந்த பின் இரண்டு சாட்சிகள் முன்னிலையில் செய்து கொள்ளும் திருமணங்கள் பதிவேட்டில் பதிந்து திருமணப் பதிவுச் சான்றிதழ் தரப்படும். அது தான் பதிவுத் திருமணம். பதிவுத் திருமணம் தோல்வியுற்றால் மணமுறிவுக்கான வழக்கும் அதே சட்டத்தின் பிரிவுகளின் கீழ் தான் தாக்கல் செய்யப்பட முடியும்.
ஆனால் திருமணப் பதிவு என்பது வேறு. அந்தந்த மதம் சார்ந்த சட்டத்தின் கீழ் அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்கள் ஏற்கனவே சமயச் சடங்குகளின் மூலம் (அல்லது தமிழக இந்துவாக இருப்பின் சுயமரியாதை முறை திருமணம் செய்து கொண்டிருந்தால்) அத் திருமணத்தை அந்தந்த மதம் சார்ந்த திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்வதே திருமணப் பதிவு ஆகும். மத முறைப்படி ஏற்கனவே நடந்த திருமணத்திற்கான சான்று இதற்கு அவசியம் தேவை.
இதில் சிக்கல் என்னவென்றால் இந்து திருமணச் சட்டத்தில் மட்டுமே ஏற்கனவே நடந்த திருமணத்தை பதிவு செய்து கொள்ள வழி இருந்தது. இஸ்லாமிய திருமணங்களைப் பதிவு செய்ய விதிகள் இல்லை. கிறித்தவர்களின் திருமணம் தேவாலயங்களில் நடத்தப்படும்போது அத் தேவாலயத்தின் பாதிரியார் அத் திருமண விவரங்களைப பதிந்து சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார். அதுவே பதிவாக சட்டம் கருதுகிறது. ஆனால் கடவுச் சீட்டு பேறும்போதும் விசா கேட்கும் போதும் திருமணப் பதிவுச் சான்றிதழ் தேவையாகிவிட்டது. திருமணத்திற்கு சரியான சான்று இன்றி ஆண்களால் ஏமாற்றப்பட்ட பெண்களின் கதி நீதிமன்றங்களை உறுத்தவே 2006ம் வருடம் சீமா எதிர் அஸ்வின் குமார் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் எல்லா
மதத்தினரின் திருமணங்களையும் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கி எல்லா மாநிலங்களும் சட்டமியற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை ஏற்று மாநிலங்கள் சட்டத்தை இயற்றின. தமிழ்நாடும்.
2009ம் வருடம் தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தையும் அதன் கீழான துணை விதிகளையும் இயற்றியது. ஆனால் அதன் முக்கியமான அம்சமே ஒரே மத்ததைச் சேர்ந்தவர்கள் அவர்களின் மதத் திருமணச் சட்டத்தை அனுசரித்து ஏற்கனவே செய்து கொண்ட திருமணங்களை சட்டப்படி பதிவு செய்து கொள்ள முடியும் என்பதே தவிர வேறு மதங்களைச் சேர்ந்த மணமக்களின் கலப்புத் திருமணங்களை அல்ல. சுயமரியாதைத் திருமணங்கள் இந்து திருமணம் என்பதால் சிக்கல் இல்லை. ஆனால் இச் சட்டத்தின் கீழ் மணமக்கள் அவசியம் பதிவாளர் முன்பு நேரில் ஆஜராவதிலிருந்து சிறப்பு விலக்கு அளித்திருப்பதை சாதகமாக்கிக்கொண்டு வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும் அதற்கு முன்பு திருமணமே செய்து கொண்டிராத நபர்களையும் தம்பதிகளாக பல சார் பதிவாளர்கள்- வழக்கறிஞர்கள் கூட்டணி அமைத்து பதிவு செய்திருப்பது தெரிந்து திகைத்துப் போனது அரசு. சென்னை உயர் நீதிமன்றமும் அத்தகைய திருமணப்பதிவுகளைச் செல்லாது என அறிவிக்க, சற்று சுதாரித்துக் கொண்டுள்ளது தமிழகப் பதிவுத் துறை. இருப்பினும் அத்தகைய சட்டவிரோதமான திருமணப் பதிவுகள் முழுமையாக நடப்பதில்லை என்று சொல்வதற்கில்லை.
தன் காதல் திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்து போடும்படி ஒரு பெண்ணை பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்ற ஒருவன் அப்பெண்ணின் முகவரி, வயதுச் சான்றை வைத்து அவரையே மணமகளாக்கி அவர் சம்மதம் இல்லாமலேயே மேற்சொன்ன சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி அவரைத் திருமணப் பதிவு செய்த உதாரணம் இங்கு உண்டு. அரை மணி நேரத்தில் ஏமாற்றப்பட்ட அந்தப் பெண் அத்திருமணப் பதிவை செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த வழக்கு எத்தனை வருடம் நடக்குமோ?
ஆகையால், கலப்புக் காதல் கடிமணம் புரியும் மணமக்களே, உங்களுக்கு வாழ்த்துகள்.
அன்பும் அறனும் உடைத்த தங்களின் திருமணம் சட்ட முறைப்படி நடக்கிறதா என்பதை விழிப்புடன் கவனிக்கவும். இல்லையெனில் பின் விளைவுகள் தீவிரப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கவனம்.
ஏன் என்றால் இங்கே திருமணம் செய்து கொள்வதைப் போல விவாகரத்து பெறுவதோ அத் திருமணம் செல்லாது என உத்தரவு பெறுவதோ எளிதல்ல.
No comments:
Post a Comment