Friday, 4 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-16

திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு முன்பொரு நாள் மகிழ்வுந்தை ஓட்டியபடி நான் பயணித்துக் கொண்டிருந்தேன்.  அன்று பேசிய வாதுரை திருப்தியாக அமைந்ததில் விளைந்த மகிழ்வுடன்.

சாயங்காலம்.
மஞ்சள் பந்தாக ஜொலித்துக் கொண்டிருந்த சூரியன் தொடுவானத்தின் மடி சாயும் காலம்.

உள்ளிருந்து யேசுதாஸ் குரலும் வெளியிலிருந்து  மஞ்சள் வெயிலும் மட்டும் சகா.

ஆனால் அதை ரொம்ப நேரம் என்னால் ரசிக்க முடியவில்லை. எதிரே தொலைவில் சாலையில் மனித நெரிசல். நெருங்கிச் சென்று நிறுத்தினேன்.

வாகனத்தில் வழக்குரைஞர் ஸ்டிக்கரை ஒட்டியிருக்க வேண்டாம் என்று யோசிக்கும் பல தருணங்களில் அதுவும் ஒன்று.

மகிழ்வுந்து ஒன்று ஈருருளி மீது மோதியதில் விபத்து. ஈருருளி ஓட்டி கொடுங்காயமடைந்து சாலையில் குருதிக்குளத்தில் கிடக்கிறார்.
தரை சாய்ந்த படி அவரது வாகனம்.

இறங்கினேன்.

நான் ஒரு வழக்குரைஞர் என்பதை என் வாகனத்தில் இருந்த ஸ்டிக்கர் அவர்களுக்கு உணர்த்த சிலர் என்னிடம் வந்தார்கள். 'சாயபு போல' என்றார் ஒருவர். 'தாடிகள் எல்லாம் தாகூரா?' என்ற வைரமுத்து நினைவுக்கு வந்தார்.

காயமுற்ற அந்த மனிதனை உடனடியாக மருத்துவமனையி்ல்  சேர்ப்பதற்கு என் உதவி கேட்கவே அவர்கள் என்னிடம் வருகிறார்கள் என்று நான் நினைத்தேன்.

இல்லை.

மாறாக அவர்கள் கேட்டதே வேறு.

ஈருருளியை ஓட்டியவர் அந்த நால் வழிச்சாலையில் அவருக்கான பாதையை விடுத்து எதிரில் வரும் வாகனங்களுக்கான பாதையில் தன் வாகனத்தை விதிகளுக்கு எதிராக ஓட்டி வரும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறது.

அவர்களிடமிருந்து கேள்விகள் வரிசையாக வந்தன.

'சார், ராங் சைடில் ஆக்சிடென்ட் ஆகி விட்டதே, இவருக்கு நட்டஈடு கிடைக்குமா?'
'போலிஸ் கம்ப்ளைன்ட் மாத்திக் கொடுக்கலாமா?'
'அடிபட்டவர் மீது தவறு இருந்தாலும் நட்ட ஈடு கிடைக்குமா?'
'புகார் யாரை வைத்துக் கொடுப்பது?'
'வண்டியை அலேக் ஆகத் தூக்கி சாலையின் அந்தப் பகுதியில் மாத்தி வைத்துவிட்டு போலிசுக்கு தகவல் சொல்லலாமா?'
'ஏதாவது கேமராவில் விபத்து பதிவாகியிருக்குமா? '
'அதைப் போலிஸ் கோர்ட்டுக்கு கொண்டு வருமா?'

நான் அடிபட்டவரைப் பக்கத்தில் போய் பார்த்தேன். உயிர் இருந்தது. துடித்துக் கொண்டிருந்தார்.

நான் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்ல எனக்கு மனம் முன் வரவில்லை.

'அவரை என் காரில் ஏற்றி பக்கத்தில் உள்ள ஏதாவது மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கலாமா?' என்று மட்டும் அங்கே இருந்தவர்களிடம் கேட்டேன்.

'இல்ல சார். 108க்கு  சொல்லியாச்சு. வந்துடும். நாங்க பாத்துக்கறோம்' என்ற பதில் மட்டுமே கிடைக்க, மனமில்லாமல் அங்கிருந்து
வண்டியைக் கிளப்பினேன்.

அந்த நிமிடம் வரை அவர்களில் ஒருவர் கூட அடிபட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தவரைச் சீண்டவும்  இல்லை. தண்ணீர் கூடத் தரவில்லை.

வண்டியைக் கிளப்பும் முன்பு கண்ணாடியை ஏற்றும் சில விநாடிப் பொழுதில் அவர்களில் ஒருவர் பேசியது மெலிதாக என் செவிகளில் விழுந்தது.

'இவருக்கு ஆக்சிடென்ட் கேசெல்லாம் நடத்தத் தெரியாது போல...நம்ம ஸ்டேஷன் வக்கீலை வச்சுப் பாத்துக்கலாம், விடுங்.....'

சிறிது தொலைவில் ஒரு காவல் ரோந்து வாகனம் நின்று சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்தது.
அவர்களிடம் விபத்து குறித்து தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

ம்யூசிக் சிஸ்டத்தை உயிரிட்டு எழுப்ப இளையராஜாவின்  இசையில் யேசுதாஸ் மெல்லிய இனிய குரலில் பாடிய அந்தப் பாட்டு ஸ்பீக்கர்களின் வழியே காருக்குள் கசிந்து வழிந்து கொண்டிருந்தது.

'என்ன தேசமோ, இது என்ன தேசமோ?'

No comments:

Post a Comment