நமது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கள் அனைத்து கீழமை நீதிமன்றங்களையும் கட்டுப் படுத்துவன. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் 141ம் பிரிவு இதை உறுதி செய்வதோடு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களுக்கு சட்டத்தின் அந்தஸ்தையும் அளிக்கிறது. ஆக, இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களை பின்பற்றியாக வேண்டும்.
அப்படியென்றால் அத்தீர்ப்புகள் எல்லா நீதி மன்றங்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும் அல்லவா?
நீதிபதிகளோ, வழக்குரைஞர்களோ
அல்லது வேறு யாராக இருப்பினும் பல்லாயிரக்கணக்கான அத்தகைய முன் தீர்ப்புக்களை தேடிக் கண்டு பிடிக்கும் பணி கடினமானது. தற்போது சட்டப் புத்தகங்களையும் தீர்ப்புத் திரட்டுகளையும்
பதிப்பிக்கும் பணி கணிணி/ டிஜிடல் மயமாக்கப்பட்ட பிறகு அத்தேடுதல் மிகப் பெரிய சவாலாக இல்லை என்றாலும் தீர்ப்புக்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில் அத்தனை தீர்ப்புக்களையும் திரட்டுவது என்பது கடினமான பணியே
குறிப்பாக ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டப் பிரிவைப் பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சட்டக் கோட்பாட்டைப் பற்றியோ இதுவரை பகரப்பட்டுள்ள அனைத்து இறுதியான தீர்ப்புக்களையும் ஒருங்கே திரட்டி ஒரு தொகுப்பாக பதிப்பித்து வெளியிடுவது அவசியமாகிறது. ஏன் என்றால் பல சந்தரப்பங்களில் உச்ச நீதிமன்றத்தின் பல முக்கியமான தீர்ப்புக்கள், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, கீழமை நீதிமன்றங்களின் கவனத்திற்கு வராமல்/தெரியாமல் போய்விடிகின்றன. அதனால் பல தீர்முடிவுகள் தவறாகவும் அதற்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்ட முன் தீர்ப்புகளுக்கு எதிராகவும் முரணாகவும் அமைந்துவிட்ட சரித்திரம் நாம் அறியாததல்ல. இதில் யாரையும் குறை கூறிப் பயனில்லை. ஏன் என்றால் ஒரு குறிப்பிட்ட பொருளில் இவை தான் இறுதியாக தீர்க்கப்பட்ட தீர்முடிவுகள் என்று இதுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள் ஒரே தொகுப்பாகத் திரட்டப்பட்டதில்லை.
சட்டப் புத்தகங்களும் சட்ட இதழ்களும் உச்ச நீதிமன்றத்தால் இயம்பப்பட்ட தீர்ப்புக்களை பதிப்பிப்பதோடு சரி. அத்
தீர்ப்புகளை பொருள்வரியாகத் திரட்டித்தருவதில்லை. முல்லா போன்ற மிகப் பிரபலமான சட்ட அறிஞர்களின் புத்தகங்கள் கூட எத்தனை முறை புதிய பதிப்பாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டாலும் அப்புத்தகங்கள் அப்பொருள் குறித்த எல்லா உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் உள்ளடக்கி யவையாக இருக்கும் என்று சொல்லமுடியாது.
ஆக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எப்படித் தெரியப்படுத்துவது?
என் சிற்றறிவுக்கு தோன்றுவது இதுவே. உச்ச நீதிமன்றம் துவக்கப்பட்ட ஆண்டான 1950 முதல் குறைந்த பட்சம் 2010 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உச்ச நீதிமன்றத்தால் பகரப்பட்ட எல்லாத் தீர்ப்புகளையும் முதலில் வகைப்படுத்த வேண்டும். அதன்பிறகு அத்தீர்ப்புகளிலிருந்து இறுதியாக்கம் செய்யப்பட்ட தீர்ப்புக்களை மட்டும் திரட்டி அவைகளை சட்டம், சட்டப் பிரிவு, சட்டக் கோட்பாடு மற்றும் பொருள் வாரியாகப் பிரிக்க வேண்டும். பிறகு அந்த வகைத் தீர்ப்புகளை settled cases, over ruled cases, cases dissented with, cases distinguished, cases pending for reference by larger bench என்று வகைப்படுத்தி ஒரு தீர்ப்புத்திரட்டாக வெளியிடப்பட வேண்டும்.
அதன் பிறகு உள்ள காலகட்டத்திற்கு ஒவ்வொரு 3 வருட இடைவெளியில் அதன் தொடர் பாகங்களை வெளியிட வேண்டும். இதை உச்ச நீதிமன்றமே முன்னெடுத்துச் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தகுதியான நீதியரசர்களைக் கொண்ட ஒரு law compilation committee அமைத்து இப்பணிகளை செவ்வனை ஏற்று நடத்தலாம் என்று தோன்றுகிறது.
சாத்தியம் தானே?
No comments:
Post a Comment