Saturday, 19 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-24

நீதிமன்றங்கள் தம்முன் உள்ள வழக்குகளில் அவசியமும் அவசரமும் இருக்கும் போது உறுத்துக்கட்டளை உத்தரவுகள் ( injunction), தடையாணை( stay) மற்றும் தற்போதைய நிலை நீட்டிப்பு (status quo) ஆகிய இடைக்கால உத்தரவுகளை பிரதான வழக்கு முடியும் வரை அமலில் இருக்கத் தக்கதாக  பிறப்பிக்கின்றன.
அம்மாதிரியான உத்தரவை எதிர் தரப்பு அவ்வழக்கில் ஆஜராவதற்கு முன்பே சூழ்நிலையின் அவசரம் கருதி பிறப்பிக்கின்றன.
அவ்வாறு ex parte  யாக இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில் நீதிபதிகளுக்கிடையே கருத்திசைவு இல்லை. இது நடைமுறையில் மிகப் பெரிய பிரச்சனையாகிவிடுகிறது என்பது கசப்பான உண்மை.
உதாரணமாக ஒரு  இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கும் போது அவ்வுத்தரவு குறிப்பிட்ட தேதி வரை மட்டுமே தரப்பட்டால் குறிப்பிட்ட தேதியில் அவ்வழக்கு அந்த நீதிமன்றத்தில் எடுக்கப்படுமா என்றால் அதற்கான பதில் கீழமை நீதிமன்றங்களில் 'ஆம்'.
உயர்நீதிமன்றத்தில்' பெரும்பாலும் இல்லை' என்பதே.

சில நீதிமன்றங்களில்  குறிப்பிடும் மறு தேதியில் அவ்வழக்குகள் எடுக்கப்பட்டு தக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றன. அது நீட்டிக்கப்படலாம். மறுக்கப்படலாம். வழக்கு முடியும் வரை அவ்வுத்தரவு நிரந்தரமாக்கப்படலாம். அல்லது இடைக்கால உத்தரவு மனுவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அம்மனு அனுமதிக்கப்படலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படலாம்.

ஆனால் உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் ஒரேமாதிரியான நடைமுறையைப் பெரும்பாலும் பின்பற்றுவதில்லை. காரணம் உயர்நீதிமன்ற வழக்குகளில் எதிர்தரப்புக்கு  அழைப்பாணை serve செய்யப்பட்ட பிறகே வழக்கில் அடுத்த கேட்பு நாள் ஏற்படுத்தப் படுகிறது. இதனால் இடைக்கால உத்தரவை நீட்டிக்க வேண்டி வழக்குரைஞர்கள் குறிப்பாக இளநிலை வழக்குரைஞர்கள் மற்றும் அவர்களது எழுத்தர்கள் போராட வேண்டிவருகிறது என்பதே உண்மை. அது வேண்டுகோளுக்கு உட்பட்டது என்று ஆகிவிட்டாலே சில நீதிமன்றப் பணியாளர்களும்
வழக்குரைஞர்களும் அவர்களது எழுத்தர்களும் தங்களுடைய
'திருவிளையாடல்களை' அரங்கேற்றத் தொடங்குகிறார்கள்.

Court slip மூலம் அனுமதி பெற்ற பிறகும் கேட்பு நாள் பட்டியலில் இடம்பெறா அத்தகைய வழக்குகள் எண்ணிலடங்கா. விளைவு? நீட்டிக்கப்படாத இடைக்கால உத்தரவின் கதி நீதிமன்றத்துக்கு வெளியே பல்வேறு துறைகளால் தீர்மானிக்கப்படுகிற அவலம் ஏற்படுகிறது. ஒரு இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படாவிட்டால் அம்மனு தள்ளுபடி செய்யப் படவில்லை அல்லது அவ்வுத்தரவு நீக்கறவு செய்யப்படவில்லை என்பதால் அந்த உத்தரவு தொடர்ந்து அமலில்தான் உள்ளது என ஒரு கருத்தும், இல்லை, இல்லை, நீட்டிக்கப்படாத ஒரு இடைக்கால உத்தரவு நீக்கறவு செய்யப் பட்டதாகவே கருதப்படும் என்று மற்றொரு கருத்தும் நிலவி வந்து அது இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத ஒரு பெரிய சர்ச்சையாகவே நிற்கிறது.

ஒரு தவணையில் ஒரு உத்தரவு ஒரு நீதிபதியால் நீட்டிக்கப்படவில்லை என்றால் மறுதவணையில் அதை நீட்டிக்க மறுக்கும் நீதிபதிகளும் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு நடைமுறை இருப்பதில் ந(க)ஷ்டம் வழக்காடிகளுக்கு தானே?

கீழமை நீதிமன்றங்களில் இப்பிரச்சனை கிடையாது. ஏன் என்றால், அங்கே எல்லா வழக்குகளிலும் அடுத்த கேட்பு நாள் நாளேட்டில் குறிப்பிடப்பட்டு அந்தக் குறிப்பிட்ட தேதியில் வழக்குகள் தவறாமல் எடுக்கப்படுவதால் ஒரு இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படும் அல்லது இறுதி உத்தரவு அம்மனுவில் பிறப்பிக்கப்படும். அந்த மாதிரி எல்லா வழக்குகளையும் குறிப்பிட்ட தேதியில் பட்டியலிடுவது என்பது உயர்நீதிமன்றத்தில் சாத்தியம் இல்லை தான்.

இதற்கு என்ன தான் மாற்று வழி?

என் சிற்றறிவுக்குத் தோன்றிய வகையில் இம்மாதிரியான இடைக்கால உத்தரவுகளை 'limited peeiod'க்கு மட்டும் வழங்குவதற்கு பதிலாக காலம் குறிப்பிடாது வழங்கலாம். அதன்பின்னர் எதிர் தரப்பு ஆஜராகத் தேவையான நடவடிக்கைகளை( பேட்டா )
மனுதாரர் மேற்கொண்டாரா என்பதைக் கண்டறிய அம்மனுவை குறிப்பிட்ட தேதியில் பட்டியலில் சேர்ப்பதை 'pending service of notice' கட்டாயமாக்க வேண்டும்.
ஒரு வேளை எதிர்தரப்புக்கு பேட்டா கட்ட மனுதாரர் தவறினாலோ, அல்லது நிபந்தனை ஏதும் விதிக்கப்பட்டு அதை மனுதாரர் நிறைவேற்றத் தவறினாலோ நீதிமன்றம் அந்த உத்தரவை நீட்டிக்க மறுத்து விட்டு வழக்கை மேல் நடத்தலாம். அந்த இடைக்கால உத்தரவால் ஒரு வேளை அந்த எதிர்தரப்பினர் குறைவுற்றிருந்தால் அந்த மனுவுக்கு பதில் உரையைத் தாக்கல் செய்து விட்டு அந்த உத்தரவை நீக்கறவு செய்யக் கோரி அந்த எதிர்மனுதாரர் தக்க மனு தாக்கல் செய்து கொள்ளட்டுமே!

தான் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ஒரு நீதிமன்றம் எந்தக் காரணமும் இன்றி தானே நீட்டிக்காமல் இருப்பதால் யாருக்கு லாபம்? அந்த வழக்கிற்காக பெரும் செலவு செய்து சட்டத்தை தன் கைகளில் எடுக்காது நமது நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்துக் கிடக்கும் வழக்காடிகளுக்கு அது ஒரு மீட்க இயலாத இழப்பாகாதா?

No comments:

Post a Comment