Wednesday, 23 March 2016

திருமணச் சந்தை

நன்கறிந்த நண்பர்
குடும்பத்தில்
திருமணக் காண்டம்.

தகப்பனின் முதுகெலும்பு 
உடைக்கப்பட்ட வில்லானது.

இருவரின் குணம் தவிர
மற்றவை எல்லாம் 
ஆழமாக அலசப்பட்டன.

சொத்துப்பத்திரம்
சேட்டு வீட்டிற்கும்
கடன் பத்திரங்கள்
மணப்பெண் வீட்டிற்கும்
குடிபுகுந்தன.

ஆடம்பர மண விழா
வேண்டுமென பெண்ணும்
அடம்பிடித்து
அப்படித்தான்  எல்லாம்
நடந்தன.

கையேந்தி, பல்லிளித்து,
கூனிக்குறுகி
கல்யாண விரயத்தை
வலியோடு மறைத்து
கடன்காரப் பெற்றவர்கள்
ஆயாசமாய் அமர்ந்து
சில மாதங்களே ஆயின.

கட்டங்களையும் கோடுகளையும்
வைத்து வாழ்க்கையைக்
கணித்த ஜோசியரால்
அவர்களது மனதைக்
கணிக்க முடியவில்லை.

கணவனைப் பிடிக்கவில்லை
என்று கதறியழுது
வீடு திரும்பினாள்
செல்ல மகள்.

பெற்றோர் வைத்த
செல்லப் பெயர்
அவளுக்கு இருக்க 
சமூகமோ தன்பங்குக்கு
பெயரொன்றை
அவளுக்குச் சூட்டி
மகிழ்ந்தது.

அமீனா ஜப்திக்கு
சம்மன் தந்தான்.
வழக்கு செலவுக்கு
புருஷனே தேவலாம்
என்றானது.

அம்மா முதலில்
முடங்கிப் போனாள்.
அப்பாவின் இதயம்
உடைந்தே போனது.

ஒரு நல்ல நாளில்
அம்மா தாலியறுக்க,
அண்ணியோ
தனிக்குடித்தனம் போனாள்.

துக்கம் தொண்டையை
அடைக்க என் தோள்
சாய்ந்து அவள்
கதறி அழுத வேளையிலும்
எனக்கு அவளின்
தகப்பன் பட்ட வேதனையே 
பெரிதாகத் தெரிந்தது.

அடிப்பெண்ணே,
இத்தனை நிச்சயமற்ற
திருமணத்திற்காகவா
உன் தகப்பனின்
உயிரெடுத்தாய்
என்று தானே நியாயமாய்
நான் அவளிடம் கேட்க வேண்டும்?

No comments:

Post a Comment