Monday, 7 March 2016

சொல்வதெல்லாம் உண்மை-18

Ignorance of law is no excuse என்பது ஒரு அடிப்படை சட்ட விதி். 'எனக்கு இப்படி ஒரு சட்ட விதி இருப்பதே தெரியாது; எனவே அதை நான் மீறியது என் தவறல்ல' என்று யாரும் தப்பிக்க முடியாது. சட்ட
விதிகளை நாம் அனைவரும் அறிவோம் என்பது அனுமானம். ஆனால் அதைத் தெரிந்து கொள்வது எப்படி? வழி ஏதும் இருக்கிறதா?

இல்லை என்பது ஒரு வேதனையான உண்மை.

குறைந்தபட்சம் அடிப்படை சட்ட அறிவையாவது பொது மக்களுக்கு கற்பிக்க அரசு என்ன மாதிரி முயற்சிகளை முன்னெடுக்கின்றது என்று பார்த்தால் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை என்பதே விடை.

குற்றவாளிகளை விட்டுவிடுவோம். அவர்கள் கதையே வேறு. சாமான்யருக்கு இந்த சட்ட விவரங்கள் எல்லாம் எங்ஙனம் தெரியும்?

அரசிதழில் வெளியிடப்பட்டால் அது ராமானுஜர் திருக்கோட்டியூர் கோபுரமேறி தானறிந்ததை ஊருக்குச் சொன்னதைப் போல ஆகிவிடுமா என்ன?

அரசிதழ்களை நீதிமன்றம் உட்பட அரசு அலுவலகங்கள் பலவும் குப்பையோடு குப்பையாக ஒரு மூலையில் தூக்கிப் போட்டு வைத்திருப்பது கண்கூடு.

தனியார் மூலமோ அல்லது ஜுடிசியல் அகாடமி வாயிலாகவோ ஒவ்வொரு முறையும் நான் சட்டம் சார்ந்த உரைக்கோவைகளை சொல்லி முடித்துவிட்டு திரும்பும் பொழுதெல்லாம் என் எண்ண ஓட்டத்தில் எழும் கேள்வி இதுவே.

எப்படி பொதுமக்கள் சட்டம் பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள முடியும்?

முழுமையான சட்ட விழிப்புணர்வு சாமான்யன் முதல் தலைமக்கள் வரை எல்லாமட்டத்திலும்  ஏற்படவேண்டும் என்றால் குறைந்தபட்ச/அடிப்படைச் சட்டக் கோட்பாடுகளும், சட்ட விதிகளும்,  சட்டம் அளித்துள்ள உரிமைகளும், அவை பாதிக்கம்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், ஒவ்வொருவருடைய கடைமைகளும் கட்டாயம் பள்ளிக்கூடங்களில் அடிப்படைக் கல்வியாக பயிற்றுவிக்கப்படுவதே ஒரே வழி.

அசோகர் சாலையின் இருபுறமும் நிழல் தரும் மரங்களை நட்ட வரலாறும், அல்ஜிப்ரா கணிதமும், ஆர்க்டிக் டர்ன் பறவையின் பருவகால இடப்பெயர்ச்சியும், ஷேக்ஸ்பியரின் கிங் லியரும், தமிழின் மனப்பாடப் பகுதி செய்யுள்களும் ஒருவனுக்கு வாழ்க்கையில் எந்த அளவு அவசியமோ அந்த அளவிற்கு அவனுக்கு தமது உரிமைகளும், கடமைகளும் அதை நிறைவேற்றத் தேவையான வழிமுறைகளும் கற்பிக்கப்படல் முக்கியம் அல்லவா?

சட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு  இல்லாமல் தானே ஒவ்வொரு நாளும் மக்கள் பல வழிகளிலும் வசமாக பலரால் ஏமாற்றப்படுகிறார்கள்.
விளிம்பு நிலை மனிதர்கள் இன்னும் தவித்து நிற்கிறார்கள்.  பெண்களின் சமூக அவலம் இன்னும் தொடர்கிறது.

வசதி படைத்த பணக்காரர்கள் கூட தேவையான சட்ட ஞானம் இல்லாத காரணத்தால் பல சந்தர்ப்பங்களில் அல்லலுறுவதைக் காண்கிறோம்.
வசதி இல்லாதவன் கதி என்ன? பாவம், அவன் என்ன தான் செய்வான்?

பிறப்பு இறப்புச் சான்றிதழ் பெறுதல், உயில், ப்ரோ நோட், ஜாமின் கையெழுத்து, கிரயப் பத்திரம், ஒத்தி, பட்டா மாறுதல், வில்லங்கம் பார்த்தல், திருணப் பதிவு/ பதிவுத் திருமணம், வேலை நிறுத்தம், இடை நீக்கம், சாலை விபத்து, முன் ஜாமீன், இன்சூரன்ஸ் பாலிசி, ஓட்டுநர் உரிமம், பெயர்  மாற்றம், வாரிசுரிமை, வாடகை ஒப்பந்தம், விவாக ரத்து, ஓய்வூதியம்,கடவுச்சீட்டு, மருத்துவக் காப்பீடு என்று நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்தில் போதுமான சட்ட அறிவு இல்லாமல் அன்றாட வாழ்வில் தவறாக வழிநடத்தப் படுகிறோம் இல்லையா?

குறைந்தபட்ச சட்டக் கோட்பாடுகளை, அடிப்படை உரிமைகளை, குடிமகனின் கடமைகளை, அதற்கான பரிகாரங்களை மட்டுமாவது  பள்ளிக்கல்வியில் ஆறாம் வகுப்பு தொடங்கிக் கற்பித்தல் தக்கது அல்லவா?

சட்டம் சொல்லும் உரிமைகளையும் அன்றாட வாழ்வில் தேவைப்படும் அடிப்படை சட்ட அறிவையும் பள்ளிக் கல்வி தவிர வேறு எங்கேயிருந்து ஒருவன் பெற முடியும்?

No comments:

Post a Comment