சொல்வதெல்லாம் உண்மை- பகுதி 9 ல் நீதிமன்றக் கட்டணம் செலுத்தும் விவகாரத்தில் பொது மக்கள் ஏமாற்றப்படுவதைப் பற்றிப் பார்த்தோம். நீதிமன்றக் கட்டணத்தை நேரடியாக வங்கியிலோ அல்லது onlineலோ செலுத்தும் வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது கோரிக்கை.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 2013ம் வருடத்து தீர்ப்பின் படி அதன் விதிகள் குழு சொன்ன பரிந்துரையை ஏற்று தமிழக அரசு தமிழ்நாடு நீதிமன்றக் கட்டணச் சட்டத்தில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிட்டிருப்பதாக இன்று அறிந்தேன். அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதே தற்போது தான் தெரியவருகிறது. அதன்படி இனிமேல் நீதிமன்றக் கட்டணத்தை முத்திரைத் தாளாகவோ அல்லது
e- stamping மூலமாகவோ நாம் செலுத்தலாம்.
அது என்ன e stamping?
அரசு நியமித்துள்ள ஆணையத்திடமோ ( Central Record Keeping Agency) அல்லது அந்த ஆணையம் அங்கீகரித்துள்ள அட்டவணை வங்கிகள் அல்லது அஞ்சல் அலுவலகங்கள் போன்ற மையங்களிலோ ( Authorised Collection Center) நீதிமன்றக் கட்டணத்தை இனிமேல் நாம் செலுத்தலாம். யாரால் எதற்காக அத்தொகை செலுத்தப்படுகிறது போன்ற முழு விவரங்களையும் அதற்கான படிவத்தில் எழுதி அந்த மையத்தில் சமர்ப்பித்து நீதிமன்றக் கட்டணத்திற்கான தொகையை அதனிடம் ரொக்கமாகவோ, காசோலையாகவோ, வரைவுக் காசோலையாகவோ, அல்லது வங்கிகள் வாயிலாக RTGS, NEFT மூலமோ அல்லது ஒரு வங்கியிலிருந்து அம்மையத்தின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியோ தொகையை வரவு வைத்தால் முழு விவரங்களோடு அம்மையம் நமக்கு ஒரு சான்று அச்சிட்டுத் தரும். ஒவ்வொரு சான்றுக்கும் ஒரு தனி அடையாள எண் தரப்படும். அச் சான்று தான் நீங்கள் உங்கள் வழக்குக்காகச் செலுத்தும் நீதிமன்றக் கட்டணத்திற்கான
e stamp.
நல்லது தான்.
போலி முத்திரைத்தாள் மோசடிகளும், அளவற்ற கமிஷன் தொகைகளும் இராது.
ஆனால் கொஞ்சம் விவரம் தெரியாவிட்டால் கடினம். ATM card போல நாளாவட்டத்தில் இதுவும் பழகிவிடும் என நம்பலாம்.
இதில் குறைபாடு ஏதும் இல்லையா என்றால் உண்டு.
அச்சான்று அல்லது e-stamp தொலைந்து போய்விட்டால் அவ்வளவு தான். அதற்கு Duplicate வாங்க விதிகளில் வழியில்லை.
அச்சான்றுகளில் ஏதும் தவறுகள் ஏற்படின் திருத்தவும் இயலாது.
மேலும் நாம் செலுத்திய தொகையை refund பெற வேண்டுமென்றால் மத்திய ஆணையத்தைத் தான் அணுக வேண்டும். தங்கள் பணத்தை வரவு வைத்து சான்று/ e stamp வழங்கிய மையத்தை அல்ல.
மத்திய அரசு நாடெங்கும்
e stampingக்கான ஆணையமாக
Stock Holding Corporation of India Limited என்ற ( SHCIL) நிறுவனத்தை நியமித்திருக்கிறது. அந்த ஆணையம் பல வங்கிகளையும் அஞ்சலகங்களையும் இதற்கான அதிகாரப்பூர்வ தொகை வசூல் மையங்களாக நியமித்திருக்கிறது.
தமிழ் நாட்டில் ஏற்கெனவே பதிவுத்துறையில் இந்த e stamping வசதி நடைமுறையில் இருக்கிறது.
இருந்த போதிலும் நீதிமன்றக் கட்டணத்தை நேரடியாகவோ அல்லது தங்கள் வழக்குரைஞர்கள் வழக்காடிகள் வங்கியிலோ அல்லது நீதிமன்றத்திலோ செலுத்தும் வகையில் இன்னும் சட்ட விதிகள் திருத்தப்படவில்லை. உண்மையில் அதுதான் மிக எளிமையான முறை.
நீதிமன்றக்கட்டணச் சட்டம் தற்போது e stamping க்கு வழிவிட்டு திருத்தப்பட்டிருப்பதால் தனியாக ஒரு ஆணையம் ( CRA) இதற்காக நியமிக்கப்பட இருக்கிறதா?
அல்லது SHCIL நிறுவனமே இதற்கான ஆணையமாகத் தொடரப் போகிறதா?
அதிகாரப்பூர்வமான வசூல் மையங்கள் ( ACC) எவை?
தெரியவில்லை.
இதற்கான விதிகள் வரும் வரை காத்திருப்போம்.
No comments:
Post a Comment