Saturday, 5 March 2016

சொல்வதெல்லாம் உண்மை- 17

சுமாராக இருபது வருடங்களுக்கு முன்பு. அப்போது நான் சிவகங்கை வழக்குரைஞன். மதுரையைச் சேர்ந்த மிகப் பிரபல ஆர்த்தோ சர்ஜன் ஒருவர் மோட்டார் வாகன நஷ்ட ஈட்டு வழக்கு ஒன்றில் ஊனம் பற்றி சாட்சியம் அளித்திருந்தார். நான் அவரைக் குறுக்கு விசாரணை செய்தேன். அவர் மிகத் திறமையான மூத்த மருத்துவர்/ அறுவை சிகிச்சை நிபுணர்.  அம்மாதிரியான வழக்குகளில் சில மருத்துவர்கள் அநியாயத்துக்கு ஊனத்தை மிகைப்படுத்தி சாட்சியம் அளிப்பது சகஜம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.  நானோ ஏற்கனவே அந்த விபத்தினால் ஏற்பட்ட காயங்களைப் பற்றி மருத்துவப் புத்தகங்கள் மூலம் ஓரளவு தெரிந்து வைத்துக் கொண்டிருந்ததாலும்  Disability Manual உதவியோடும் அந்த மருத்துவரை விரிவாக குறுக்கு விசாரணை செய்தேன். குறிப்பாக வலி மற்றும் வேதனைக்கு ஆதாரமின்றி அவர் ஊனம் அதிகமாக கணித்திருந்தார் என்பது என் வாதம். அவரது வலி பற்றிய சாட்சியம் தான் எனது குறுக்கு விசாரணையில் பிரதானம்.

அது நடந்து முடிந்து இரண்டு வாரம் தான் இருக்கும். நான் சிவகங்கை நீதிமன்றத்தில் தலைசுற்றி 'out stretched hand' நிலையில் கீழே விழுந்ததில் என் இடது கரத்தின் 'அல்னா மற்றும் ரேடியஸ்' என்ற இரண்டு எலும்புகளும் முறிந்து போயின.

மதுரையில் உள்ள ஒரு பிரபல மருத்துவ மனையில் அனுமதி. அந்த வாரமே அறுவை சிகிச்சை. எந்த மருத்துவரை நான் குறுக்கு விசாரணையில் படுத்தி எடுத்தேனோ, அதே மருத்துவர் தான் எனக்கு அறுவைச் சிகிச்சை செய்யப் போகும் மருத்துவர் ஆனார்.

அறுவைச் சிகிச்சை செய்யப்படும் நேரம் வரை முறிந்த எலும்புகள் ஒரு சட்டம் வைத்து இறுகக் கட்டப்பட்டிருக்கும். வலி அதிகம் தெரியாது. ஆனால் அறுவைச் சிகிச்சைக்கு சில மணிகளுக்கு முன்னால் கட்டைப் பிரித்து விட்டு நோய்த்தொற்றை தடுப்பதற்காக அந்தக் கைகளிலிருந்து ரோமங்களை அகற்றுவதில் துவங்கி அறுவைச் சிகிச்சை அரங்கிற்குள் அரை மயக்கத்தோடு நுழையும் வரை உடைந்த எலும்புகள் ஏற்படுத்தும் வலி இருக்கிறதே..
அம்மம்மா...கொடுமை.

மயக்க மருந்து  ஊசி வழி எனக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிமிடங்களில் உள்ளே வந்த அந்த மருத்துவர் என்னைப் பார்த்தார். சிரித்தார். சிநேகமாக.

'யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கேலி செய்யலாம். But no one has the right to belittle the one with pain.
நீங்கள் என் ஊனச் சான்றிதழில் வலி குறித்த ஊனத்தின் அளவை விமரிசித்தீர்கள் இல்லையா? இப்போது சொல்லுங்கள்..இந்த வலி கடுமையானதா?இல்லையா?' என்றார் பொறுமையுடனும் கனிவுடனும்.

'மிகக் கொடியது சார்' என்றேன் கண்ணீருடன். என் தோள்களை தட்டிக் கொடுத்துவிட்டு அவர் சொன்னார். 'வலிகளில் மிகக் கொடியது தீக் காயங்களால் ஏற்படும் வலி். அதற்கு அடுத்தது இந்த வலிதான் தான் தெரியுமா...!'

ஏதோ ஒரு ரூபத்தில் வலியும் வேதனையும் மகிழ்ச்சியும் நிம்மதியும்  மாறி மாறி வந்து போய் எனது வாழ்க்கைப் பயணம் அதன் போக்கில் சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் எந்த ஒரு வழக்கிலும் வலி மற்றும் வேதனையை இனி எக்காலத்திலும் நான் கொச்சைப்படுத்த மாட்டேன் என்ற முடிவை நான் மயக்க நிலையில் இருக்கும் போது  எடுத்திருந்தாலும் அம்முடிவு என் மூளை என் மனதைக் கலந்தாலோசித்து எடுத்த முடிவென்பதால் இன்று வரை நான் அதை மீறவில்லை.

என்ன, காலம் சில பாடங்களை நமக்கு வலிக்க வலிக்கக் கற்றுத் தருவதால் நம்மால் அவற்றை மறக்க முடிவதில்லை.

2 comments: