தோழா.
ப்ரஞ்ச் Intouchables திரைப்படத்தின் அதிகாரப் பூர்வமான மறுவாக்கம். அதனால் அதன் கார்பன் காப்பி. அந்தப் படம்தான் மலையாள beautiful மற்றும் இந்தி குல்ஜாரிஷ் ஆகிவற்றின் source of inspiration.
இயக்குநருக்கு ஒரு ஷொட்டு. இப்படி ஒரு feel good திரைப்படத்தைத் தந்ததற்காக. வறண்டு வாடும் தமிழ் திரையுலகில் இது ஒரு கோடை மழை.
மனுஷனுக்கும் மனசுக்குமான பிணைப்பை அழகாகவும் சுவையாகவும் இயல்பாகவும் சொல்லியிருக்கும் பாங்கு நன்று.
ஆனால் ப்ரஞ்ச் படத்தில் வெள்ளை- கறுப்பு இன வேற்றுமையை மையப்படுத்தியிருந்தது போல இதில் சித்தரிக்கப்படவில்லை. கதை மாந்தர்களிள் குணாதிசயம் தான் முன்னிலை. இனம் அல்ல.
படத்தின் மிக வலுவான அம்சம் நடிகர் தேர்வு. இரு மொழிப் படம் என்பதால் அதிகமான கவனம் காட்டியுள்ளனர். நாகார்ஜுனா, கார்த்தி, ப்ரகாஷ்ராஜ் மூவரும் அசத்தல்.
குறிப்பாக கார்த்தி சிரசில் இன்னொரு மயிற்பீலி. தாயால் வெறுக்கப்படும் இவர் தன்னை நிரூபிக்க வேண்டி அனுபவிக்கும் பாடுகள் அய்யோ பாவம் ரகம். அந்த வேதனையை அறிந்தவர்களுக்கு சீனுவாக வரும் கார்த்தியின் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் வலிக்கும். ஆனால் மெலோ ட்ராமாவாக திரைப்படம் போகாமல் முழுவதும் அங்கங்கே இயல்பாக நகைச்சுவையையும் கார்த்தி லாவகமாகத் தெளிக்கிறார்.
வீல் சேரோடு படத்தையும் நகர்த்துகிறார்.
கழுத்துக்குக்கீழே இயக்கமில்லாத paraplegic கோடீஸ்வரனாக நாகார்ஜுனா. வெறும் முக பாவனைகள் மட்டுமே காட்ட வேண்டிய பாத்திரத்தில் over acting செய்ய வாய்ப்பு அதிகம் உண்டு. குறிப்பாக tight angle shots அதிகம் கொண்ட அந்தக் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனாவின் நடிப்பு பாராட்டுக்குரியது. கழிவிரக்கம், பொருமல், கையாலாகாத்தனம், ஆற்றாமை என எல்லாவிதமான உணர்ச்சிகளையும் அநாயாசமாக தன் அமைதியான முக பாவனையில் கச்சிதமாக வெளிப்படுத்தி நாக் அப்ளாஸ் அள்ளுகிறார்.
ப்ரகாஷ்ராஜ். மீண்டும் அமர்க்களம். இப்படம் மாதிரி மிரட்டல் க்ளோஸ்- அப் ஷாட்ஸ் அவருக்கு வேறு படத்தில் கிடைத்தாலும் இந்த effect கிடைக்குமா என்பது அய்யமே. குறிப்பாக அந்த இரண்டு லட்ச ரூபாய் ஓவியத்திற்கு அவர் காட்டும் expressions.. ...செம !!
தமன்னா. மெல்லினமும் இடையினமும் சிக்கென அமையப்பெற்று படம் முழுவதும் வலம் வரும் நாயகி. என்னது,
நடிப்பா? அதெல்லாம் யார் கேட்டது? அவருக்கும் நாகார்ஜுனாவிற்கும் ஆடைத் தேர்வு பிரமாதம். ஒரே ஒரு சந்தேகம். தமன்னா சாப்பாடெல்லாம் சாப்பிடுவாரா? இல்லை ஸட்ரா வைத்து வெறும் காற்று மட்டும் உறிஞ்சுவாரா?
படத்தின் பலம் என்றால் உரையாடல்கள். அங்கங்கே மிதமான ஹ்யூமர். தேவைப்பட்ட இடங்களில் அளவான சென்ட்டி. நேசம் பற்றிய காட்சிகளில் வருடல். ராஜு முருகன் கூட்டணி நெகிழவைக்கிறது.
மனுஷன் போகும் இடங்களுக்கெல்லாம் மனசு போகணுமா?, நேசம் உள்ள இடத்தில பயம் இருக்கும் போன்ற வசனங்கள் கதையின் பயணத்திற்கு நன்கு உதவுகின்றன.
ஒளிப்பதிவு இதம். லைட்டிங் அருமை. பாரிஸ் காட்சிகள் பளிச். விக்ரம் சக்கர நாற்காலியிலிருந்து Eiffel towerஐ அதன் அருகாமையிலிருந்து கழுத்தைத் தூக்கிப் பார்க்க முடியாத ஆற்றாமையையும் அதையே இரவில் தொலைவிலிருந்து முழுதாகப் பார்க்க முடிகிற போது அடைகிற மகிழ்வையும் இயக்குநர் ஒளிப்பதிவாளரின் லென்ஸ் வழியே சொல்கிற காட்சி அழகு.
ஏமாற்றம்? உண்டு.
கோபி சுந்தரின் இசை. பாடல்களும் சுமார். அநிருத் பாடும் பாட்டு உட்பட எல்லாம் இசை இரைச்சல். பின்னணி இசை கொஞ்சமும் கைகொடுக்கவில்லை. பின்னணி இசை மட்டும் அம்சமாக அமைந்திருந்தால் படம் இன்னொரு தளத்திற்குச் சென்றிருக்கும்.
எடிட்டர். அவர் தனது கத்தரிக்கு சாணை பிடிக்கவில்லை போல. படத்தின் நீ....ளம் அதிகம். பல காட்சிகள் இழுவை. கார் சேஸ் எல்லாம் இன்னும் சுருக்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த ஐட்டம் சாங் முகம் சுளிக்கச் செய்கிறது. கல்பனா, விவேக், ஜெயசுதா...வழமையான நடிப்பு.
மனிதனின் அக/உளத் தேவைகளை உரக்கச் சொல்கிற கதை.
பணம் மட்டும் பிரதானம் என்று ஒரு தலைமுறையே அலைகிற காலத்தில் பணம் தவிர மனிதனுக்கு வேண்டிய இதர தேவைகளை அழுந்தச் சொல்லும் திரைக்கதை.
அவசியம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய கருத்து.
இப்படி எல்லா வகையிலும் ஸ்கோர் செய்திருக்கிற படம்.
Your review talks more than the movie itself !!! Thanks to my translator .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete