சில வருடங்களுக்கு முன்பு என் நண்பரிடமிருந்து ஒரு அவசர அழைப்பு. அவரது கணவர் மிக மோசமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனே அங்கு வர முடியுமா எனக் கதறல். சென்றேன்.
எனக்கு வழக்கறிஞர் நண்பர்களை விட மருத்துவர் நண்பர்களே அதிகம். ஒரு மருத்துவர் அவர் இறந்து விட்டதாகச் சொன்னார். என் நண்பர் அதை ஒப்புக் கொள்ள மறுத்து அழுது அரற்றி அடம் பிடித்துக் கதற ஒரே களேபரம்.
நான் சொன்னேன் "சொன்னாக் கேளும்மா, அம்மருத்துவர் என் நண்பர், சரியான தகவல் தான் சொல்லுவார்...". அவர் கேட்கவில்லை. அழுகை. கதறல். ஆவேசம். மயக்கம். தெளிந்த பின் மீண்டும் அழுகை. கதறல். ஆவேசம்.
வேறு வழியின்றி நான் சொன்னேன். அனுமதி வாங்கி மருத்துவரோடு சவக்கிடங்கில் அவர் கணவரைப் பார்த்து விட்டு வருகிறேன். என் மீது நம்பிக்கை உடையவர் அவர். சரி என்றார். நானும் மருத்துவரும் சவக்கிடங்கில் நுழைந்தோம்.
அங்கே சடலங்கள் தரையிலும் கட்டிலிலும் கிடத்தப்பட்டிருக்கும் கோலத்தையும் அக்கிடங்கின் நிலையையும் அங்கே வீசும் குடலைப் பிடுங்கும் நாற்றமும் கண்டு திகைத்துப் போனேன்.
Human Dignity கேள்விக்குள்ளாகும் இடம் சவக்கிடங்குகள்.
அழகாக ஆடை உடுத்தும் என் நண்பர் அங்கே ஆடையின்றி கிடத்தப்பட்டிருந்தார். எனக்கு அங்கே இருந்த நிர்வாணம் ஏதும் ஆபாசமாகத் தெரியவில்லை.
அவரைத் தொட்டுப்பார்தோம். அவர் அதுவாகியிருந்தார். சுவாசம் இல்லை. உடல் விறைத்துவிட்டது. சில்லென இருந்தது. இறப்பை மருத்துவர் ஊர்ஜிதம் செய்தார்.
ஒரு நிமிடத்தில் என் மனதில் 'அவனாக' இருந்தவர் எப்படி 'அதுவாக' மாற்றி உணரப்பட்டார் என்பது செவிட்டறையாக இருந்தது.
நாம் அவ்வளவுதானா?
உறைந்து போனேன்.
நண்பரிடம் பேசி உண்மையை உணரவைத்து வீடு வந்த பிறகு இன்று வரை மரணத்தை நான் புரிந்து கொள்ளத் தலைப்படவில்லை.
மூன்றாம் வகுப்பில் பயிலும் போது வகுப்புத் தோழன் ரவீந்திரன் பாம்பு கடித்து இறந்ததாக அறிந்தவுடன் வீட்டுக்குச் சொல்லாமல் சுடுகாடு சென்ற முதல் அனுபவம் தொடங்கி நிறைய நேரில் பார்த்த விபத்து மரணங்கள், கண்ணுக்கு முன்னே பிரிந்த மாமியின் உயிர், தீயில் வெந்து கரிக்கட்டையாய் விறைத்துப் போன மாமா மகளின் சடலம், திருவல்லிக்கேணியில் நடு ரோட்டில் கொலை செய்யப்பட்டு டயர் வைத்து எரிந்து கொண்டிருந்த ஒரு சடலம், கடற்கரையில் துப்பட்டாவால் கட்டுண்டு கரை ஒதுங்கிய காதல் ஜோடி, வள்ளலார் படம் போல சடலக்கூறாய்வு செய்யப்பட்டு கட்டிப்போடப்பட்ட சடலம்....
இன்னும் எத்தனையோ அனுபவங்கள் நம் எல்லோருக்குமே உண்டு.
பிரசவ வைராக்கியம், சாராய வைராக்கியம் போல மயான வைராக்கியமும் தங்காத ஒன்றாகிவிட்டது.
மரணம் சொல்லும் பாடம் மறுநாள் கூட நீடிப்பதில்லையே, ஏன்?
தெரியவில்லை. புரிவதில்லை.
மனிதனுக்கு தரும் மதிப்பு சடலத்துக்கு ஏன் இல்லை?
பாடையில் கிடத்தும்போதே 'அவர்' சட்டென 'பொணம்' ஆகிவிடுவது ஒரு அவலம் தானே?
மிகக் கொடுமையான மற்றொரு விஷயம் ஒன்று உண்டு.
சில வருடம் முன்பு விபத்தில் இறந்து போன நண்பரின் சடலக் கூறாய்வுக்கான மருத்துவரின் வருகைக்காக காத்திருந்தோம். மருத்துவர் வந்த பிறகும் கிடங்கின் கதவுகள் வெகு நேரம் திறக்கப்படவில்லை. ஏன் என்று கேட்டால் கிடைத்த வாய்ப்பை விடாமல் ஒரு பேராசிரியர் அனாடமி பாடத்தை செயல்முறை விளக்கமாக மருத்துவ மாணவர்களை வைத்துக் கொண்டு நீண்ட நேரம் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தால் கால தாமதம் என்றார்.
அதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியும். சடலத்தைக் கூறு போட்டு தைத்து துணிவைத்துக் கட்டிய பிறகு முகம் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் என் நண்பரை இறுதியாக ஒரு முறை பார்க்க 'ஏற்பாடு' செய்துவிட்டு உள்ளே போனவன் தீயை மிதித்தது போலத் துடித்துப் போனேன்.
அங்கே இருந்த மருத்துவ மாணவன் ஒருவன் அங்கே இருந்த பெண் சடலத்தின் மார்பகங்களைக் கிள்ளியபடி ஏதோ சொல்ல, அருகிலிருந்த மருத்துவ மாணவிகள் அதைக் கேட்டு ரசித்து சிரித்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.
அவ்வாறு செய்வது சிலர் மட்டும் தான் என்றாலும் இத்தகைய திரை மறைவில் ரகசியமாக நடக்கும் நிகழ்வுகள் நாம் மருத்துவர்கள் மீதும் மருத்துவமனை மீதும் மருத்துவமனை ஊழியர்கள் மீதும் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் அஸ்திவாரத்தில் ஏற்படுத்தும் விரிசல் இல்லையா?