Saturday, 27 February 2016

சொல்வதெல்லாம் உண்மை-8

இதுவரை இரு தடவைகளில் நான் கீழமை நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் நின்று சாட்சியம் சொல்லி உருக்கிறேன். அவை இரண்டும்  சுவாரசியமான அனுபவங்கள்.

ஒரு வழக்கி்ல் நீதிமன்ற ஆணையராக நியமிக்கப்பட்ட நான் வழக்கிடைச் சொத்தினைப் பார்வையிட்டு விரிவான அறிக்கை & வரைபடம் தாக்கல் செய்திருந்தேன். எட்டு வருடங்கள் கழித்து அதன் மீதான மேல்முறையீட்டு வழக்கு மீட்டனுப்புகை செய்யப்பட்ட பிறகு நான் அவ்வழக்கில் ஒரு சாட்சியாக கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டேன். எனக்கு நான் ஏற்கனவே பார்த்து எழுதிய எல்லாமே முழுவதும் மறந்து விட்டது. மீண்டும் வழக்கிடைச் சொத்தை மறுபார்வையிட நீதிமன்றம் எந்த உத்தரவும் தரவில்லை.

நீதிமன்ற ஆணையர்
( Commissioner) போன்ற official witnesses தேவைப்பட்டால் வழக்கு ஆவணங்களைப் படித்துப் பார்த்து விட்டு சாட்சி சொல்ல சட்டம் அனுமதிக்கிறது. (Refreshing memory).

ஆனால் எனக்கு அந்தக் கோப்புக்களை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தும் ஒன்றும் ஞாபகம் வரவில்லை. பாவம் அந்த வழக்கரின் வழக்கறிஞர். பலப்பல  கேள்விகளை எத்தனையோ விதங்களில் எப்படி எப்படியெல்லாமோ கேட்டுப்பார்த்தார். என் வாக்கு மூலத்தில் பதிவான பதில்கள் என்ன தெரியுமா?
' எனக்கு ஞாபகம் இல்லை', ' மறந்து போய்விட்டது',  'தெரியாது'  & ' என்று சொன்னால் சரியில்லை'. வேறு எதுவுமில்லை. அதில் கையெழுத்துப் போட்டு விட்டு வெளியேறி வரும் போது அந்த தட்டச்சர் சொன்னார்; "சத்தியமாச் சொல்றேன் சார், இந்த மாதிரி நான் ஒரு வாக்கு மூலத்தை இதுவரை என் லைப்ல நான் டைப் அடிச்சதே இல்லை'. அவரிடம் நான் சொன்னேன்;  'நான் இப்போது சொன்னதெல்லாம் நிஜமாவே உண்மையே!'.

மற்றொரு சிவில் வழக்கில் நான் வழக்கரின் அதிகார முகவர். என்னைக் குறுக்கு விசாரணை செய்த வழக்குரைஞரை நான் அதற்கு முன்பு வேறு வழக்கில்  விரிவாக குறுக்கு விசாரணை செய்திருக்கிறேன். அவர் அந்தக் காட்டத்தில் இருந்தது எனக்குத் தெரியாது. கேட்ட கேள்விகளுக்கு நான் நிதானமாகவே பதில் சொல்லிவந்தேன். அவர் எதிர் பார்த்த ஒப்புதல் பதிலை நான்  சொல்லவேயில்லை என்பதால் அவருக்கு ஏமாற்றம். அந்த பதில் கிடைத்தால் அவர் தரப்புக்கு அவ்வழக்கில் வெற்றி என்று கருதினார் போல. கோபம் கொண்டவராய் கேள்விக் கணைகளை அவர் அடுத்தடுத்து தொடுக்க நான் சிரித்துக் கொண்டே ஒவ்வொன்றாய்  மறுக்க, திடீரென்று நீதிபதி தேவையின்றி என்னைப் பார்த்து சத்தமாகச் சொன்னார்;
' சார், ஒழுங்கா அவர் கேட்கிற கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லுங்க. You are bound to answer him!'.

அந்த சத்தமும் அறிவுறுத்தலும் ஏதோ ஒரு நெருடலை என் மனதில் ஏற்படுத்தியது. நான் ஒரு தவறும் இழைக்காத போது நீதிபதி ஏன் அப்படி சீற  வேண்டும்? அந்த நிமிடம் வரை அமைதியாக இருந்த நான் சொன்னேன்.
'யுர்  ஆனர், எனக்கும் தெரியும். கோர்ட்டில் சாட்சியாளரான என்னிடம்  வக்கீல் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் சொல்வது எனது கடமை தான். ஆனால் எந்தக் கேள்விக்கு எந்த பதில் சொல்வது என்பது என் விருப்பம். இந்த பதிலைத் தான் சொல்ல வேண்டும் என்று என்னைக் கட்டாயப்படுத்த  அவர் யார்? நீங்கள் தான் யார்?'

அவ்வளவு தான். எதிர்பாராத என் பதிலால் அங்கே அப்படியே எல்லாரும் உறைந்து நிற்க, அந்த இருவரும் அதன் பிறகு ஏதும் பேசவில்லை. சீக்கிரம் குறுக்கு விசாரணை முடிந்துவிட்டது.

ஏதும் தவறாக நான் சாட்சியாளராக இருந்து சொன்னேனா? என்று நான் அங்கிருந்த என் நண்பர்களைக் கேட்டேன். அவர்கள் 'இல்லை' என்றார்கள். அன்று  நான் சொன்னதை சரியென்று  இப்போதும் நம்புகிறேன்.

அது சரி, அந்த நீதிபதி தன் கோபத்தை என் மீது காட்டவில்லையா என்று கேட்கிறீர்களா?
காட்டினாரே.
கடைசியில்.
பேச்சில் இல்லை.
வெள்ளை காகித்ததில் பச்சை மையால் காட்டினார்.

No comments:

Post a Comment