Saturday, 27 February 2016

சொல்வதெல்லாம் உண்மை- 1

மதுரை உயர்நீதி மன்றத்தில்
( நீள்பலகை?) பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இப்போதும் நன்றாக நினைவில் இருக்கிறது.
அது ஒரு காப்பீட்டுக் கழகத்திற்காக என்னால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு. அன்று மதுரையில் அந்த வழக்குகளை விசாரித்து வந்த அந்த நீதியரசரின் சுழற்சிப் பணியின் இறுதி நாள்.

மறுநாள் வேறு ஒரு நீதியரசர் அத்தகைய வழக்குகளை விசாரிப்பார் என்பதால் அன்றே அவ்வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்து மிகக் காரசாரமான வாதங்கள் இருபக்கமும் சமர்ப்பிக்கப்பட்டன.

காப்பீட்டுக் கழகங்களுக்காக வழக்காடும் வழக்குரைஞர்கள் தங்கள் கடமையைச் செய்தாலும் பெரும்பாலும் வெகுஜன விரோதியாகவே கருதப்படுவது ஒரு துரதிர்ஷ்டம். பல சமயங்களில் சில வழக்குரைஞர்கள் அப்படி நடந்து கொள்வதும் அதற்கு ஒரு காரணம் என்பது தனிக்கதை.

நான் மேற்கோள் காட்டி எடுத்தியம்பிய ஒரு உச்ச நீதிமன்றத் தீர்முடிவில் 'ஒரு சட்டக் கோட்பாட்டைப் பற்றி ஒரு ஈராய / பேராயத் தீர்முடிவு ஏதும் இருந்தால் தனி நீதிபதி அதை அவசியம் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் அது ஒரு நீதிப் பிறழ்வாகவே (judicial indiscipline) கருதப்படும்' என்று சொல்லப் பட்டிருந்தது.
அத் தீர்முடிவை நான் முன்வைத்தவுடன்  நான் ஏதோ அவரை அவ்வாறு குறை சொல்வதாக நினைத்துக்கொண்டு என் மீது சினமும் கொண்டு அந்த வழக்கை மறுநாளுக்கு தானாகவே ஒத்திப்போட்டார். என் உழைப்பு வீணானதில் எனக்கும் வருத்தம்.

மறுநாளே அவ்வழக்கு மீண்டும் வேறு ஒரு நீதியரசரால் விசாரிக்கப்பட்டு இரு தரப்பு வாதுரைக்குப் பிறகு என் தரப்புக்கு சாதகமாகத் தீர்ப்பானது. அதுவும் ஒரு பெரிய விஷயமல்ல.

அதன்பின் நிகழ்ந்தது தான் சிறப்பு.

தீர்ப்பைக்கேட்டு திருப்தியுடன் வெளியே வந்த என்னைப் பார்த்து ஒரு நபர் கேட்டார்;
' சார், வெல்டன்'
' நன்றி சார்.
கிளம்பினேன்.
' சார், ஒரு நிமிஷம்'
'என்ன?' கேட்டேன்.
' இதே கேசைத் தானே நேத்திக்கும் நீங்க பேசினீங்க?' கேட்டார்.
'ஆமாம், அதுக்கென்ன?'
' அதென்ன சார் நியாயம்?, ஒரே கேஸ், அதே வக்கீல்கள், ஒரே ரெகார்ட்ஸ், ஒரே ஆர்கியூமண்ட், ஒரே சட்டப் புத்தகம் வச்சுதானே ரெண்டு பேரும் ரெண்டு பேர்கிட்டேயும் பேசினீங்க? கேட்டார்.
'ஆமாம்!' சொன்னேன்.
'நேத்து கேட்ட அந்த ஜட்ஜு உங்க அப்பீல் சரியில்ல, டிஸ்மிஸ் பண்ணணும்னு சொன்னாரு, இன்னிக்கோ அதே ரெண்டு வக்கீல்கிட்ட இன்னொரு ஜட்ஜு  அதே கேசில் அதே ஆர்க்யுமண்டஸைக் கேட்டு உங்க தரப்புக்கு சாதகமாகத் தீர்ப்பு சொல்ராறே, அது எப்படி சார் ?'

கேட்டாரே ஒரு கேள்வி!

'இதுக்காகவா இத்தனை சட்டப் புத்தகம்? என்றார் மேற்கொண்டு!

எத்தனை பெரிய விஷயத்தை இப்படி பொளேரென்று கேட்டுவிட்டாரே,  இவருக்கு எப்படிப் புரியவைப்பது?  திகைத்துப் போனேன்.

சட்டமும் நீதியும் என்ன, பரிசோதனைச்சாலை முடிவுகளா?
தனிமனித சிந்தனையின் பரிணாமத்திற்கு இடமில்லையா? என்ற யோசனைகளோடு
அது சரி, நீதியின் தேரோட்டத்தில் consistency யும் அவசியம் தானே என்ற எண்ணமும் என் மனதில் அப்போது ஊடாடியதென்னவோ உண்மைதான்.

இருப்பினும் 'அப்பீலில் மாத்துற மாதிரி தானே? சொன்னேன்.

ம்ஹூம்....அவர் மசியவில்லை.

'ஆனா இது அப்பீல் இல்லையே?' சளைக்காமல் சொன்னார்.

'உங்க கையைக் கொஞ்சம் நீட்டுங்க' என்றேன். செய்தார்.

' அஞ்சு விரலும் ஒரே மாதிரியா  இருக்கு?'  கேட்டுவிட்டு அவர் பதிலை எதிர்பாராமல் நகர்ந்தேன்.

அவருக்குப் புரிந்த மாதிரித் தெரியவில்லை.

உங்களுக்கு?

No comments:

Post a Comment