அவர்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியவர். சிம்மக் குரலுக்கு சொந்தக்காரர். ஆஜானுபாவத் தோற்றம் கொண்டவர். கம்பீரமானவர்.
சட்ட நுணுக்கங்களில் தேர்ந்தவர். கண்டிப்பானவர். மொத்தத்தில் அவர் ஒரு சிம்ம சொப்பனம். இளைய வழக்குரைஞர்கள் அந்த நீதிமன்ற அறைக்குள் நுழையும் போது கால்கள் ஒரு கணம் தயங்கும்.
போன வருடம் ஒரு திருமண வரவேற்பில் அவரைச் சந்தித்ததாக மூத்த வழக்குரைஞர் திரு. டி.வி. சிவக்குமார் Sivakumar Varadarajan அவர்கள் சொன்ன போது நண்பர்கள் பலரும் அவருடனான மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட போது என் நினைவிடுக்கிலிருந்து முகிழ்த்த சம்பவம் இது.
சென்னையில் King & Partridge என்ற பெருமை மிகு சட்ட அலுவலகத்தில் நான் இளநிலை வழக்குரைஞனாக பணியாற்றிய காலம் அது. தொழிலில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை.
வழக்குகளை தானே சுதந்திரத்துடன் நடத்தும் உரிமை அங்கே இளைய வழக்குரைஞர்களுக்கு உண்டு. அப்படியாக ஒரு நாள் என்னை அவரது நீதிமன்றத்துக்கு வாதாட அனுப்பினார்கள். என் வாய்ப்பு வருவதற்காக காத்திருந்தேன்.
அரசு வழக்குரைஞர் தரப்பில் ஒரு கோப்பு நீதிபதியிடம் தரப்பட்டது. மேலே நாடா கட்டிய மஞ்சள் வண்ணமிட்ட அட்டையுடன் கூடிய அந்த அரசாங்கக் கோப்பை அவர் பாரத்தார். அதன் மேலே 'மந்தணம்' என்று அச்சிடப்பட்டிருந்தது. மந்தணம் என்றால் என்ன பொருள் என்ற அவரது அய்யத்துக்கு அங்கே அன்று பதில் தருவார் யாருமில்லை. கோபத்தில் அவரது முகம் சிவக்க நீதிமன்றமே அரண்டு போனது. போதாத குறைக்கு அங்கே அழைத்து வரப்பட்ட நீதிமன்ற மொழிபெயர்ப்பாளருக்கும் அதன் அர்த்தம் தெரியவில்லை. அங்கிருந்த அரசு ஊழியர்களுக்கும் தெரியவில்லை. 'Google, Yahoo and Wikipedia' போன்ற தேடுதளங்கள் பிறந்திராத காலம். மனிதனின் மூளை மட்டுமே விஷயங்களைத் தேடித்தரும் காலம்.
நான் எழுந்தேன். நேரடியாக நான் அறிந்திருந்த பதிலைச் சொல்லியிருக்கலாம். ஆர்வக் கோளாறு மேலிட..."it is so simple my lord" என்றேன். நேற்று மழையில் இன்று முளைத்த காளான் போல நான் அவருக்குத் தெரிந்தேன் போல. ஒரு மைக்ரோ வினாடி என்னைப் பார்த்தார். என்ன என்று கூட கேட்கவில்லை.
"What....? Go and take your seat...' என்ற அவரது அதட்டலில் பயந்து போனாலும் நான் அமரவில்லை. 'Since my father is an officer in the State government and brings files to home daily, i know the meaning of the term' என்றேன் அழுத்தமாக.
அப்போது தான் என்னை இவர் கூர்ந்து பார்த்தார். 'Is it so? Tell me the meaning 'என்றார்.
நான் சொன்னேன்: 'அரசுக் கோப்புகள் மூன்று வகைப்படும்.
1. அவசரம்- பச்சை வண்ண அட்டை.
2. சாதாரணம்- சிவப்பு வண்ண அட்டை
3. மந்தணம்- மஞ்சள் வண்ண அட்டை.' That we know..what is meant by that word? என்று கர்ஜித்தார்.
'To my little knowledge my lord, it means 'confidential' my lord' என்றேன். அங்கே படர்ந்த அமைதி எனக்கு உதறலைக் கொடுத்தது. தவறான முறையில் எதையும் சொல்லி விட்டேனோ? என்ற அச்சம் வேறு என்னைப் பிடுங்கியது.
லஸ் பிள்ளையாரை மனதுக்குள் வேண்டிக்கொண்டேன். அதற்குள் தலைமைச் செயலகத்திலிருந்த வரவழைக்கப்பட்ட தமிழறிந்த அலுவலர் ஒருவர் நீதிபதியிடம் ஏதோ ஒரு புத்தகத்தைக் காட்டினார்.
அது வரை எனக்கு 'திக் திக் திக்' நிமிடங்கள் தான். அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார். ஒரு செ.மீ. அளவில் சிரித்தார். "You are correct. Good job. Thank you" என்றார். அவரது அறைக்குப் போய்விட்டார். பிறகு அங்கு போன நீதிமன்ற அலுவலர்கள் தலையைக் குனிந்தபடி வெளியே வந்தனர்.
நான் பாராட்டு பெற்றது கூட எனக்கு அப்போது பெரிதாகப் படவில்லை. ஏன் தமிழில் பல வார்த்தைகள் வழக்கத்தில் இல்லாமல் பொருள் தெரியாமல் இருக்கிறது என்பதே தொக்கி நின்ற கவலை.
நமக்கு பேச்சு வேறு செயல் வேறு என்பதை நான் உணர்ந்த அத்தருணம் வலிமிக்கது.
சுஜாதா வார்த்தைகளில் சொன்னால் ' மிஸ் தமிழ்த்தாயே, நமஸ்காரம்!'
----
பின்குறிப்பு;
சிவப்பு அட்டை கொண்ட கோப்புகள் 'சாதாரணம்' என்பதால் ஆமை வேகத்தில் தான் அதில் கண்ட வேலைகள் நடக்கும். அதனால் தான் சுணங்கும் வேலைகளை Red Tapism என்கிறோம்.
I resolve to follow the blog regularly..A real treasure trove of legal world..I M WAITING
ReplyDeleteI resolve to follow the blog regularly..A real treasure trove of legal world..I M WAITING
ReplyDelete