Monday, 29 February 2016

மண்ணில் தெரியும் வானம்

இயற்கை மங்கையின்
வளமே அவளது
அழகின் சிரிப்பு.
அவளில் மிகையாய்
வசீகரமானது
ஏதெனக் கேட்டால்
எதைச்சொல்வேன்?
எதை விடுவேன்?

அவளின்
அங்கமெல்லாம்
அள்ளும்  அழகு!
ஆயினும் முதலிடம்
என்று ஒன்று
எதிலும் உண்டுதானே?

ஆமெனில்
காரணம் சொல்லல்
அதனினும் இனிது.

என் காதல்
வானமும் வானம்
சார்ந்தவைகளின்
மீதுதான்.

வானம்.
ஆதவன்.
தண்மதி.
முகிலினம்.
மின்னல்.
இவை கூட்டணி
அமைத்து
நிகழ்த்தும் மாயம்.
ஒவ்வொன்றும்
வர்ணஜாலம்.

அது ஏன் வானம்?

சொல்கிறேன்.

வானம்
நிரந்தரமானது.
நிர்மலமானது.

அளவுகளுக்குள்
அடங்காதது.
அதிசயங்கள்
அடங்கியது.

இருந்த இடத்தில்
பார்க்கக்கிட்டுவது.
சேரிக்கும் சேட்டுக்கும்
பொதுவானது.

பரவசமானது.
ஆனாலும்
இலவசமானது.

கைக்கெட்டாததால்
கசங்காதது.
கூட்டணிக்கு
இயைவது.

அரசனாயிராத
எத்தனையோ
சித்தார்த்தர்கற்கு
போதிமரமானது.

பயணந்தோறும்
வழித்துணையானது.
தளர்ந்த மனதுக்கு
விசிறியானது.

எனக்கு
அந்த வானமே
தாய்மடியுமானது.

No comments:

Post a Comment