Saturday, 27 February 2016

சொல்வதெல்லாம் உண்மை-10

ஒரு மருத்துவ-சட்ட உலா. ஒரு நெஞ்சம் கனக்கும் சம்பவம்.

என் கட்சிக்காரரின் மனைவிக்கு Deep Vein Thrombosis என்று ஒரு வியாதி. அவசியமற்று ரத்தம்  உறைந்து  கட்டியாகி ஈர்ப்பு விசை காரணமாக  கீழிறங்கி காலில் உள்ள இரத்தக் குழாயில் (சிரை) அடைப்பை ஏற்படுத்தும் வியாதி என்று எளிமையாக அதை விளக்கலாம். சரியான சிகிச்சை பெற்றாலும் சில சமயம் அது மரணத்தை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

அந்த வியாதி உள்ள தன் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று கேட்டு அவரது கணவர் என்னிடம் வந்தார். மெத்தப் படித்தவர். நல்ல நிறுவனத்தில் பணிபுரிந்து நல்ல ஊதியம் பெறுபவர்.

நான் முதலில் மிகவும் தயங்கினேன். தீரா வியாதியைக் காரணம் காட்டி விவாகரத்து கோரும் வழக்குகளை நான் எளிதில் ஏற்பதில்லை. காரணம் அதற்கு சரியான மருத்துவச் சான்றுகள் வேண்டும். தற்போது மருத்துவ உலகம் கொண்டுள்ள பிரமிக்கத் தக்க வளர்ச்சியில் தீரா வியாதி, ஆண்மையின்மை, மலட்டுத் தன்மை என்று எந்த ஒரு காரணியையும் சான்றுகள் இன்றி அறுதியிட்டு மெய்ப்பிப்பது மிகக் கடினம். ஆதாரமின்றி பழி சுமத்துவது பாவம் வேறு.

ஆனால் அவரது தகப்பனார் என் மாமாவின் சிபாரிசுடன் வந்தார். எனவே என் மருத்துவ நண்பர்களை ஆலோசித்து விட்டு முடிவு செய்வதாகக் கூறினேன்.

உண்மையில் அவரது மனைவிக்கு  திருமணத்திற்கு முன்பே அந்த வியாதி இருந்திருக்கிறது. அதற்கு தொடர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் அவர்கள் அதை மறைத்து திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.

தவறுதான்.

அதன் காரணமாக மட்டும் விவாகரத்து வாங்குவது எளிதல்ல. காரணம் அது தீராத வியாதியா? இல்லையா? என்பதை நிரூபணம் செய்தால் தான் முடியும். தன் மனைவிக்கு தரப்பட்ட சிகிச்சை பற்றிய ஆதாரம் அவரிடம் இருந்தது. அதன்படி அப்பெண் தாய்மை அடைவது உசிதமல்ல. அந்த வியாதிக்குத் தரப்படும் மருந்துகள் இரத்தம் உறையாமல் தடுக்கும். எனவே அவருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டால் எளிதில் ரத்தம் உறையாது. அது அவர்களின் உயிருக்கு ஆபத்தானது என்றது மருத்துவ நூல்கள். பிரசவத்தின் போது இயற்கையாக பெண்களுக்கு ரத்தம் கட்டியாகி ரத்தம் வீணாகாமல் காக்கிறது. ஆனால் இந்த வியாதி உள்ளவர்கள் தொடர்ந்து உட்கொள்ளும் மருந்தால் பிரசவத்தின் போது அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர்கள் மரணமடையும் வாய்ப்பு அதிகம் என்றும் அறிந்தேன். அதற்கு pulmonary embolism என்று பெயர். அதன் mortality rate அதிர்ச்சியானது. அதை நன்கு அறிந்த அவர் கரப்பத்தடை மாத்திரைகளை கணவருக்குத் தெரியாமல் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததோடு தாம்பத்திய உறவையும் கூடியவரை தவிர்த்து வந்திருக்கிறார். ஒரு அளவிற்கு மேல் எதையும் அவரால்
மறைக்க முடியவில்லை.

மனம் வெறுத்த கணவர் மனைவியை வெறுக்கத் தொடங்கிவிட்டார். விவாகரத்து தான் அவரது ஒரே நோக்கம்.

சட்டம் அனுமதிக்கும் காரணிகள் இருந்தன. எனவே அவருக்கிருந்த DVT வியாதி தீராதது என்றும், கருவுறுவதைத் தடுக்கும் மருந்துகள் சாப்பிட்டு வந்து தாம்பத்திய உறவுக்கு மறுப்பதையும்,  அவரால் குழந்தைப் பேறு எனது கட்சிக்காரருக்கு கிடைக்காது என்றும் காரணம் காட்டி விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்தேன்.

வழக்கு விசாரணையை துரிதப்படுத்தச் சொல்லி அப்பாவும் பிள்ளையும் என்னைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. எதிர்தரப்பு வக்கீலோ என்னிடம் இரண்டு மாதங்கள் கழித்து இந்த வழக்கு விசாரணையைத் தொடங்குங்கள் என்று கேட்டுக்கொண்டார். நான் அதற்கு காரணம் கேட்டபோது அவர் சொன்னார்:
'அதிக பட்சம் ஒரு மாதம் அவர் உயிரோடு இருப்பதே கஷ்டம். She is critical and her days are numbered.'

அந்த மருத்துவ மனையில் உள்ள என் மருத்துவர் நண்பர் ஒருவர் மூலம் அச் செய்தி உண்மையே என்பதை நான் தெரிந்து கொண்டேன்.

'சாகும்போது தன் கணவரின் மனைவி யாகத்தான் அவர் சாக விரும்புகிறார்' என்றார் அவரது வக்கீல். மருத்துவமனையிலிருந்து அப்பெண் எனக்கு தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். தான் விரைவில் சாகப் போவதாகவும், சாகும் வரை தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் வேண்டுகோள் விடுத்து இதை அவரிடம் சொல்லித் தங்களை சேர்த்து வைக்கும்படி அதில் அவர் கண்ணீர் மல்கக் கேட்டிருந்தார்.

தந்தையும் மகனும் அதற்கு சிறிதும் ஒப்புக்கொள்ளவில்லை. நான் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். 'அது உங்கள் மனைவியின் கடைசி ஆசை தானே, நிறைவேற்றலாமே' என்று சொன்னேன். கேட்க மறுத்துவிட்டார்.

'அவர் இறந்த பிறகு இவ் வழக்கு எதற்கு? அவர் மறைந்த பிறகு
மறுமணத்திற்கு ஏது தடை? எனவே அவருடன் சேர்ந்து வாழாவிடிலும்  பரவாயில்லை, வழக்கைப் பிறகு நடத்திக் கொள்ளலாம், அது வரை அவரை மருத்துவமனையில் அவ்வப்போது  பார்த்துவிட்டு வாருங்கள்' என்றும் சொன்னேன். அதற்கும் மறுத்துவிட்ட அவர்கள் மனைவி இறப்பதற்கு முன் தனக்கு விவாகரத்துக்கான தீர்ப்பு வேண்டும் என்றதோடு நில்லாமல் எனக்கு அவரது மனைவி மருத்துவ மனையிலிருந்து எழுதிய கடிதத்தை அவருக்கு எதிராக அவ்வழக்கில் ஆவணமாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தம் செய்யத் துவங்கினர்.

சட்டப்படி அந்தக் கோரிக்கை ஏற்கப்படக் கூடியதாக இருக்கலாம்.
ஆனால்  ஒவ்வொரு வழக்குரைஞரும் அடிப்படையில் மனிதன் தானே!

எனக்கு மனம் ஒப்பவில்லை. வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நான் மறுத்துவிட்டதோடு வழக்குக் கட்டையும் முன்பணத்தையும் திரும்பக் கொடுத்து விட்டேன்.
அதன் பிறகு அவ்வழக்கைப் பற்றி நான் எதுவும் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை.  என்னைப் பார்த்தால் ஏதோ ஒரு எதிரியைப் பார்ப்பது போல இருவரும் தங்கள் முகத்தைத் திருப்பிக்
கொள்வார்கள்.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து என்று ஞாபகம். அப்பெண் சிகிச்சை பெற்று வந்த அதே மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என் நண்பரை நலம் விசாரித்து விட்டு வெளியே வரும் போது மின்தூக்கியில் என்னைப் பார்த்து விட்டு ஒருவர் மேல் துண்டால் தன் வாயைப் பொத்தியபடி அழுதார்.

அது அழுகை அல்ல.  ஒரு மெளனமான கதறல்.

அவர் அப்பெண்ணின் தந்தை என்பதை அடையாளம் கண்டு அவரோடு  சென்றேன். தள்ளி நின்று பார்த்தேன்.

வாசலில் அப்பெண் 'சுமங்கலி'ச் சடலமாக அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தார்.

அந்தத் தொலைவிலும் நன்றாகத் தெரிந்தது.

அவர் தன் கழுத்தில் இருந்த தாலியை தனது வலது கரத்தால் இறுகப் பற்றிய படியே இறந்து போயிருந்தார்.

No comments:

Post a Comment