Saturday, 27 February 2016

சொல்வதெல்லாம் உண்மை-3

நடைமுறைச் சிக்கல்களையும் அரசியல் பிண்ணனியையும் சற்றே ஒதுக்கிவிட்டு பார்த்தால் உண்மையில் நீதிமன்றத்தில் தமிழ் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

1998 ம் வருடம் என நினைக்கிறேன்.
திரு. எஸ். திருப்பதி என்பவர் சிவகங்கையில் முதன்மை மாவட்ட நீதிபதியாக இருந்தார். உயர்நீதிமன்றம் சென்னையில் மட்டும் இயங்கிய காலம். நான் சிவகங்கையில் வழக்குரைஞனாகப் பணிபுரிந்து வந்தேன்.

அப்போது ஒரு சிறு குழந்தையின் காப்பாளர் உரிமை குறித்த ஒரு வழக்கின் விசாரணை நடந்து முடிந்து வாதுரைக்காகக் கேட்புநாள் ஏற்பட்டிருந்தது. குழந்தையின் தாயார் இறந்துவிட்டதால் அக்குழந்தையின் காப்பாளராக தன்னை நியமிக்கக் கோரி இறந்து போன மனைவியின் தகப்பனார் வழக்காட நான் எதிர்தரப்பினரான  அக்குழந்தையின் தகப்பனாருக்கு ஆஜரானேன்.

மூத்த வழக்கறிஞர் திரு. எஸ். நடராஜன் அவர்கள் மறு தரப்பி்ல் இருந்தார். அவர் திறமையான மூத்த வழக்கறிஞர். நீதிபதியும் அனுபவம் மிக்க அறிவார்ந்தவர். வழக்கு சூடுபிடித்தது.

கீழமை நீதிமன்றங்களி்ல் பொதுவாக இறுக்கம் குறைவு. இணக்கம் அதிகம். கலகலப்புக்கு பஞ்சமிராது. நான் எப்போதும் 'கல கல' என்று இருக்க விரும்புவன்னே தவிர இப்போது உள்ளது போல  'லக லக' என்று அல்ல. சிவகங்கை நகர் வழக்குரைஞகளின் நேசமும் அன்பும் அலாதியானது. மேலும் கீழமை நீதிமன்றங்களில் நகைச்சுவைக்கு நிறைய இடமுண்டு.

அவ்வழக்கின் வாதுரையின் போது எதிர் தரப்பு வழக்குரைஞர் 'குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்று திருவள்ளுவரை மேற்கோள் காட்டினார். நீதிபதி நிமிர்ந்து உட்காரந்தார்.
'அட, நல்லாயிருக்கே' என்றபடி என்னைப் பார்த்தார்.

"என்ன இது ' சாலமன் பாப்பையா' ஸ்டைலா? " என்றேன் நான்.

ஏன்? என்றார் நீதிபதி.

'பின்ன என்னவாம்?' தொடர்ந்தேன்,
'அதில் வள்ளுவர் சொன்ன 'மக்கள்' என்ற வார்த்தை பெற்றவர்களை மட்டும் குறிக்கும்,  எதிர்க்கட்சிக்காரத் தாத்தாவுக்குப் பொருந்தாது' என்றேன்.

ஏன் அப்படி? என்று விவாதம் தமிழை நோக்கித் திரும்பியது.

தம் என்ற சொல் தனக்குப் பின் வரும் மக்கள் என்ற சொல்லை அதன் உண்மையான வீச்சிலிருந்து சுருக்கிவிடுகிறது என்பது என் வாதம். எனவே மக்கள் என்ற சொல் தான் பெற்ற மகன் அல்லது மகள்களை மட்டும் குறிக்குமே தவிர பேரக்குழந்தைகளை அல்ல என்பது என் கருத்து.

எதிர் தரப்பில் மக்கள் என்பது குறுகிய நோக்கில் பார்க்கப்படாது. அது பெயர் சொல்லும் பேரக்குழந்தைகளையும் உள்ளடக்கும் என்றார்.

சட்டத்தையும் சாட்சியங்களையும் சற்று தள்ளிவைத்து விட்டு இந்த இலக்கிய விசாரத்தை முழு ஆர்வத்துடன் நீதிபதி முன்னெடுத்தார். மறுநாளும் வாதுரை தொடர்ந்தது.

பரிமேலழகர் தொடங்கி முனைவர் மு.வ. , மு.க., தேவநேயப்பாவலர், மற்றும் நாமக்கல் கவிஞர் வரை எல்லாருடைய உரையும் நீதிமன்றத்தில் உலா வந்தன. அனல் பறக்கத்தக்க ஆனால் பொசுக்காத சொற்களோடு வாதிட்டோம்.

'மக்கள்' என்ற வார்த்தைக்கான பல பொருளும் பேசப்பட்டன. நான் தமிழ் அகராதிகளைகளையும் குறள் உரைகளையும் வைத்து முழங்க  எதிர் தரப்பும் தம் மக்கள் என்ற சொல்லுக்கான பொருளுக்கான ஆதாரங்களுடன் அச்சொல் அகண்ட அர்த்தம் கொண்டதாக சீற, வாதுரை பட்டி மன்றமாகிவிட, அடடா! என்ன இனிமையான சொல்லாடல் தெரியுமா?

தமிழன்னைக்கு நிச்சயம் அன்றைய தினம் தூக்கம் வந்திருக்காது.

நீதிபதியும் தான் அறிந்த சொற்களை எல்லாம் மேற்கோள் காட்டினார்.  இறுதியில் மக்கள் என்ற சொல் குழந்தை என்ற பொருள்படச் சொல்லும்போது தம் மகள்/மகன்களை மட்டும் குறிக்குமே தவிர பேரக்குழந்தைகளை அல்ல என அவர் முடிவு சொன்னார். எனக்கு அப்படி அச்சொல்லைக் குறுக்கியதில் உடன்பாடு இல்லை தான்.

சட்ட நெறிகளின் படி வாதிட்டு குழந்தையின் சம்மதமும் முன்னுரிமையையும் கேட்டறிந்து
என் கட்சிக்கு வெற்றி கிடைத்தது ஒருபுறம் இருக்கட்டும்.

சுவைபடப்பேசி வழக்காடும் இன்பம் உயர்நீதிமன்றத்தில் உண்டா என்றால் பரவலாக இல்லை என்றே தோன்றுகிறது. சில நீதியரசர்களின் அமர்வில் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது.

தீர்ப்பு பகன்ற பின் அந்த நீதிபதி சொன்னார்.

"தற்காலத் தமிழனின் அடையாளம் எது தெரியுமா?"

ஙே என்று முழித்தோம்

யாருக்கு தமிழில் பேசுவது கெளரவமாக இல்லையோ, யாருக்கு இங்கிலிஷ் வராதோ. யாருக்கு  இந்தி பிடிக்காதோ அவன் தான் தமிழன் என்றார் நகைச்சுவைக்காக.
உண்மையோ தவறோ, தமிழன் அப்படி இருப்பது தமிழுக்கும் நன்மையன்று. அவனுக்கும் ஏற்றதன்று.

சிறப்பு ழகரம் கூட சரியாக உரைக்கத் தெரியாதவரெல்லாம் வாய் கிழிய "தமில்" இலக்கியம் பேசும்போதெல்லாம் காதில் அமிலமாக உணர்கிறேன்.

அது சரி, உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்குவது சரியா?

என்னைக் கேட்டால் அதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

ஆனால் எனக்கிருக்கும் சந்தேகம் எல்லாம் இதுதான்;

இந்தியையும் ஆங்கிலத்தையும் வேண்டாம் என்று மறுப்பவர்களின் உண்மையான  உள்ளக்கிடக்கை என்ன?

தமிழ்ப்பற்றா?  ஆங்கில அறியாமையா? அல்லது இந்தி வெறுப்பா?

தமிழன்னைக்கே வெளிச்சம்!

No comments:

Post a Comment