சில நேரங்களில் சில வார்த்தைகள் நம்மை புருவங்களை உயர்த்த வைக்கும். நெற்றியைச் சுருக்கவைக்கும். சாமரம் வீசிச் செல்லும். அனல் அடித்துச் செல்லும். இன்னும் பல விதங்களில் நம்மை அசைத்துப் பார்க்கும். நாம் சிலவற்றைக் கண்டு கொள்வதில்லை. சிலவற்றைக் காணாமல் தள்ளிவைத்து விடுகிறோம். சிலவற்றை மனதின் ரகசிய அறைகளில் பூட்டி வைக்கிறோம். சில சொற்கள் நமக்கு ஆச்சரியத்தைத் தந்து விடுவதோடு அதன் பின்புலத்தை ஆராயத் தூண்டவும் செய்கின்றன இல்லையா?
அப்படி என்னை புரட்டிப் போட்ட ஒரு வார்த்தை என்ன தெரியுமா? அது ஒரு கருத்தோ, வசவோ, பாராட்டோ அல்ல. அது ஒரு மனிதரின் பெயர் மட்டுமே.
'ரங்கராஜன் ராவுத்தர்.'
வியப்பாக இருக்கறதா?
எனக்கும் அப்படித்தான் இருந்தது. மதமாற்றம் செய்த ஒரு இந்து தனது புதிய இஸ்லாமியப் பெயரோடு பழைய இந்துப் பெயரையும் இணைத்து எழுதிக் கொள்வதை நான் அதுவரை அறிந்ததில்லை.
தான் வாங்கவிருக்கும் சொத்தில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா என்றும் தனக்கு அதை விற்கவிருக்கும் நபருக்கு அச்சொத்து பாத்தியமானதா என்றும் சட்டக் கருத்துக் கேட்டு இளையாங்குடி நகரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அன்பர் பல வருடங்கள் முன்பு என் அலுவலகம் வந்தார். அவர் கொடுத்த ஆவணங்களையும் மூலப்பத்திரங்களையும் நான் ஒவ்வொன்றாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஆவணத்தில் சொத்தின் முன்னாள் உரிமையாளரின் பெயராக 'ரங்கராஜன் ராவுத்தர்' என்று கண்டிருந்தது. வியப்பு மேலிட அவரிடம் அது குறித்து வினவிய போது அவர் சொன்னார் ;
(எங்கள் பேச்சைக் கேள்வி பதில் வடிவில் தருகிறேன்.)
- எங்க ஊர்ப்பக்கம் இதெல்லாம் சகஜம் சார்
-ஏன் அப்படி?
-உங்களுக்கு மருத நாயகம் பற்றித் தெரியுமா?
-கமல்ஹாசன் புண்ணியத்தில் ஏதோ கொஞ்சம் தெரியும்.
-அவர் முஸ்லிமாக மதம் மாறியவர்.
-யூசுப் கான் தானே, அதற்கென்ன?
-இளையாங்குடி மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த முஸ்லிம்கள் எல்லாம் ஒரு காலத்தில் உங்க ஆட்கள் தான் தெரியுமா?
(மதுரை முகவை வட்டார வழக்கில் எங்க ஆளு, 'உங்க ஆளு, என்ன ஆளு' என்றால் அது பொதுவாக ஒரு நபரின் சாதியைக் குறிக்கும்)
-அப்படியா?
-மருதநாயகம் யூசுப் கானாக மாறிய பிறகு இந்த ஊரில் எல்லா அய்யரும் முஸ்லிமாக மாறினாங்க சார். எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில நடந்தது சார் இது.
-அதுக்கும் இதுக்கும்....?
- சம்பந்தம் இருக்கு சார்....
- எப்படி?
- மதம் மாறினாலும் அக்காலத்தில் கெஜட் சிஸ்டம் இல்லாததால் புதிதாய் ஒருவர் ஒரு பத்திரம் எழுதும் போது மூலப்பத்திரத்தில் தன் பெயர் ஆதியில் எப்படி இருந்ததோ அதே பெயரை தற்போது எழுதும் பத்திரத்தில் எழுதிவிட்டு கூடவே ராவுத்தர், சாயபு, பாய் போன்ற மத சார்புப் பெயரையும் சேர்த்து எழுதுவார்கள்.
-உண்மையாகவா?
-பின்ன? நான் எதுக்கு பொய் சொல்லப் போறேன்?
வந்த காரியம் முடிந்து அவர் கிளம்பிவிட்டார. சுவாரஸ்யமான தகவல் என்பதால் அது எனது நினைவிடுக்கில் ஒரு பக்கமாகப் பதிந்து கொண்டுவிட்டது.
நாட்கள் கழிந்தன. தினசரி நாட்காட்டியும் மாத நாட்காட்டிகளும் கிழிந்து ஆண்டுகள் பறப்பதை அறிவித்தன.
எனது நண்பரும், என் மூத்த சகோதரியின் கணவரின் வகுப்புத் தோழனும் பிரபல எழுத்தாளரும் கணிணியியல் வல்லுநரும் தமிழ் நாடக ஆசிரியருமான திரு. இரா. முருகன் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 ஆகிய திரைப் படங்களின் வசனமும் அவரே. கமல்ஹாசனுக்கு அவர் மிக நெருங்கிய நண்பர். என் தந்தை வழிப் பாட்டனாராகிய அமரர். இராமானுஜம் அய்யங்காரும் கமலின் தகப்பனாரும் நண்பர்கள். பிரபல வழக்குரைஞர்கள். ஆனால் அவர்களுக்குப் பிறகு எங்களுக்குள் தொடர்பு விட்டுப் போயிற்று. ஒரு காலத்தில் கமல் சிவகங்கையில் எங்கள் தாத்தா வீட்டுக்கு வந்த கதையை இரா முருகன்ஜி தனது ராயர் காபி க்ளப் நூலில் சுவைபடச் சொல்லியிருப்பார்.
உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தின் உரையாடல்களை மிகவும் ரசித்த நான் அது குறித்து திரு. முருகனுடன் அலைபேசியில் அளவளாவிக் கொண்டிருந்த போது பேச்சு மருதநாயகம் பற்றித் திரும்பியது. அப்போது நான் அவரிடம் ரங்கராஜன் ராவுத்தரை மானசீகமாக அறிமுகம் செய்தேன். ரசித்தார். சில நாட்கள் கழித்து திரு. முருகன் அவர்களிடமிருந்து அலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. ரங்கராஜன் ராவுத்தர் என்ற பெயரும் அதன் பிண்ணனியும் கமலுக்கு மிகவும் பிடித்திருப்பதாக என்னிடம் சொன்ன திரு. முருகன் அவர்கள் தக்க ஆதாரம் இல்லாமல் அதை எந்த விதத்திலும் பயன்படுத்த கமல் தயாரில்லை என்றார். நியாயம் தான் என்றேன் நானும். அந்த ஆவணத்தின் நகலைப் பெற்றுத் தர முடியுமா என்று என்னிடம் முருகன்ஜி கேட்டார். சரி என்று நான் சொல்லி பல வருடங்கள் கடந்துவிட்டன.
அன்று முதல் நானும் அம்புலி மாமா வரும் விக்கிரமாதித்தனைப் போல தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் அந்த ஆவண நகல் யாரிடமாவது எப்படியாவது கிடைக்குமா என்று தே...............டிக்கொண்டே இருக்கிறேன். ம்ஹூம். ராவுத்தர் கையில் சிக்கமாட்டேன் என்கிறார்.
அந்த மாதிரியான ஆவணத்தின் நகலைப் பெற்றுத்தருபவர்களுக்கு மருதநாயகம் படத்தில் ஒரு நிமிடமாவது தலையைக்காட்டும் வாய்ப்பை கமலிடம் முருகன்ஜி சொல்லி வாங்கித்தருவார் என்று நம்புகிறேன். ( இரா. முருகன் EraMurukan Ramasami மன்னிப்பாராக).
எதற்கு அந்த ஆவண நகல் என்றால், பெயரின் பொருட்டு சர்ச்சை வராதா என்ன?
பாலு மகேந்திராவின் 'அப்துல் ராமன்' சர்ச்சை காரணமாகத் தானே 'ராமன் அப்துல்லா' என்று மாற்றப்பட்டது. (ஆனால் அவரது 'ஜூலி கணபதி' தப்பிவிட்டது.)
அய்யா, ரங்கராஜன் ராவுத்தர் அவர்களே, எங்கிருந்தாலும் முகநூல் திண்ணைக்கு உடன் வரவும். உன்னைப்போல் ஒருவனுக்காகத்தான் தூங்கா வனத்தில் ஒரு சகலகலாவல்லவன் காத்துக் கொண்டிருக்கிறார். பிரச்சினை ஏதும் விஸ்வரூபம் எடுக்காது என்று அந்த ரங்கராஜ ராவுத்தரிடம் எப்போது சொல்லப் போகிறேனோ?
No comments:
Post a Comment