என் கட்சிக்காரருக்கு இருந்த தைரியம் கூட எனக்கு அப்போது இல்லையே என்று இப்போதும் நான் நினைத்து நினைத்து தலைகுனியும் சம்பவம் இது. ஒரு உயர்நீதிமன்ற நீதியரசரின் அறையினுள் நடந்த சம்பவம்.
அந்த கணவன்-மனைவி இருவரும் உயர் அரசு அதிகாரிகள். கெளரவமான குடும்பத்தினர். அவர்களுக்கு நன்கு படித்த அழகான ஒரு மகள். திரைப்படங்களில் வருவது போல ஒரு இளைஞனோடு அவளுக்கு அமர காதல். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. காதல் என்ற வார்த்தை அவளுக்கு தெய்வீகமானது. வீட்டை விட்டு பணம், நகைகளோடு சொல்லாமல் கிளம்பிவிட்டாள். பதிவுத் திருமணமாகி உடன் தனிக் குடித்தனம். இவள் மாணவி. அவன் ஒரு VIP...புரியவில்லையா?
வேலையில்லாப் பட்டதாரி. மதுவினடிமை. தினமும் அதீத அளவில் மது அருந்தி விட்டு பணம் கேட்டு இவளை அடிப்பதே அவனுக்கு வேடிக்கை.
இவளுக்கோ இதுவே வாடிக்கை.
கள் ஆனாலும் கணவன். Full ஆனாலும் புருஷன் அல்லவா?
தன் வீட்டிலிருந்து அவள் கொண்டு வந்த நகைகள் ஒவ்வொன்றாக தினமும் விற்கப்பட்டன. பணம் எல்லாம் தடபுடலாகச் செலவிடப்பட்டது. இரண்டே வாரங்களில் கையில் ஏதும் மிச்சம் இல்லை.
அவனது கொடுமை தாங்க முடியாமல் பிறந்த வீட்டுக்கு அவள் வந்து விட்டாள். விவாகரத்து மனு தாக்கல் செய்வதில் இருக்கும் சட்டச் சிக்கல்களை வக்கீலிடம் பரிசீலித்துக் கொண்டிருக்கும் போது உயர்நீதிமன்றக் கிளையிலிருந்து காவல் நிலையம் மூலமாக ஓர் அழைப்பாணை அவளின் பெற்றோருக்கு வந்தது.
தன் காதல் மனைவியை அவளது பெற்றோர்கள் கடத்தி வந்து சட்ட விரோதமாகப் வீட்டில் பூட்டி வைத்திருப்பதாகப் புகார் அளித்து ஆள் கொணர்வு நீதிப் பேராணை மனுவொன்றை உயர்நீதி மன்றத்தில் அவன் தாக்கல் செய்திருக்கிறான். இதில் எப்படி Habeas Corpus petition வரும் என்றெல்லாம் கேட்டால் நீங்கள் மக்கள் விரோதியாகி விடுவீர்கள். ஜாக்கிரதை.
நான் அவளின் பெற்றோர்களுக்காக ஆஜராக ஒப்புக்கொண்டேன். குறிப்பிட்ட நாளில் காலை அவ்வழக்கு ஈராயத்தில் எடுக்கப்பட்டது. பெண்ணும் அவரது தாயாரும் நேரில் ஆஜராயினர். தந்தை முக்கியப் பணி காரணமாக அன்று ஆஜராக இயலவில்லை. மதியம் 2.15க்கு நீதிபதியின் அறையில் வழக்கு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அன்று எனது நீதிமன்றப் பணிகள் முடியவே நண்பகல் 1.40 மணி ஆகிவிட்டதால் மதிய உணவை அவசர அவசரமாக அள்ளிப் போட்டுக்கொண்டு மீண்டும் நீதிமன்றத்துக்குச் செல்ல சற்று காலதாமதாகிவிட்டது. என் கட்சிக்காரரை நீதிபதி அழைக்கும் போது உள்ள போகச் சொல்லி யிருந்தேன். அதற்குள் நீதிபதியின் உதவியாளர் செல்லிடப் பேசியில் அழைத்தார். 'சார், உடனே வாங்க...அவசரம்...' என்றார்.
சிறிது நிமிடங்களில் என் நண்பர் ஒருவரின் அழைப்பு..
'ராகவன், உள்ளே பெரிய பிரச்சினை....கவனமாக இருங்க...'
எனக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. விரைந்தேன். காலம் தாழ்த்தியமைக்கு நீதியரசர்களிடம் வருத்தம் தெரிவித்தேன். அதன் பிறகு நடந்தது தான் நான் எதிர்பாராதது.
'Mr counsel, your client is not agreeing for any of the proposals mooted. She is adament. Tell her about the consequences of disobeying the court orders' என்றார் இருவரில் மூத்தவர். எனக்கு எதுவும் புரியவில்லை. அரசு உயர் அதிகாரியான என் கட்சிக்காரர் மூர்ச்சையாகித் தரையில் கிடந்தார். ஒரு பெண் அலுவலர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த நீதிபதிகளில் இளையவர் அவருடைய உதவியாளரிடம் ' give him the agreement ' என்றார். படித்துப் பார்த்தேன். அதில் அப்பெண்ணின் பெற்றார்
அவர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதாகவும், தங்கள் சொத்துக்களில் அவரது பங்கை தன் மகளுக்கு பிரித்துத் தருவதாகவும் வாசகங்கள் இருந்தன. கணவன் ஏற்கனவே தட்டச்சில் அதைத் தயாரித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்.
அந்த உதவியாளர் சொன்னார். 'இதில் கையொப்பமிட உங்கள் க்ளயன்ட் மறுத்து விட்டார்.அதோடு நீதிபதிகளை எதிர்த்தும் பேசினார்'.
அப்போது என் கட்சிக்காரர் மயக்கம் தெளிந்து எழுந்தார். என்னிடம் கேட்டார். 'இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்படி என்னை யாராவது கட்டாயப்படுத்த முடியுமா?'
நான் அமைதியாகச் சொன்னேன்;
' அது செல்லாது. உங்களை அந்த ஆண்டவனாலும் கட்டாயப்படுத்த முடியாது மேம்' அதைக் கேட்ட அந்த மூத்த நீதியரசரின் கோபம் அதிகரித்தது. 'மிஸ்டர், என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?தெரியாதா?' . சுற்றிலும் நீதிமன்ற அலுவலர்களும் பத்திரிக்கை அன்பர்களும் புகைப்படக் காரர்களும் குழுமியிருக்க, நான் சூழ்நிலையை அவதானித்து விட்டு அமைதியாகச் சொன்னேன். 'நன்றாகத் தெரியும் மிலாட்'.
பின்பு என் கட்சிக்காரரை கை தூக்கி தரையிலிருந்து எழுப்பிவிட்டுச் சொன்னேன், 'மேல், உங்களுக்கு சம்மதமில்லை என்றால் கையெழுத்திட மறுத்து விடுங்கள். சுற்றிலும் press personnel இருக்கின்றனர். They will take stock of the situation. In case you are compelled to affix your signature, please make your protest and lodge a complaint to the Chief Justice of India with an affidavit.'
இதனிடையே நீதிமன்ற அலுவலர் ஒருவர் இளைய நீதியரசரின் அருகே சென்று என் கட்சிக்காரர் ஒரு அரசு உயர் அதிகாரி என்பதைச் சொன்னார். அதற்கு மேல் நான் அங்கே நிற்கவில்லை. வெளியே வந்தேன். தண்ணீர் வாங்கிக் குடித்தேன். ஒரு நாற்காலியில் அமரப் போகும் போது உள்ளிருந்து ஒரு ஆவேசப் பெருங்குரல் கேட்டது.
'இதுவா கோர்ட்? நீங்க ஒரு ஜஸ்டிசா, இல்லை....நீங்க ஒரு......... ...!
'How dare are you?I will order action against you'
'Do if u can'
'Brother, please calm down. Mam, you can go now. Let us hear the matter on some other day'. இது வேற்று மாநிலத்தைச் சேர்ந்த தமிழ் தெரியாத அந்த இளைய நீதியரசரின் குரல். ஒரு கனத்த மெளனம் அவ்விடத்தைக் கவ்வியிருந்தது. நான் இன்னும் தைரியமாக செயல்பட்டிருக்க வேண்டுமா? Contempt நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டிருந்தாலும் சரியென்றில்லாமல் நான் வெளியேறியது கடமை தவறிய செயல் இல்லையா? இக்கேள்விகளின் அனலில் நான் வெட்கினேன். வெளியே வந்த என் கட்சிக்காரரிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கோரினேன். அந்த வழக்கிலிருந்து என் குற்ற உணர்வால் விலகிக் கொண்டேன். வாங்கிய முன்பணத்தை திரும்பக் கொடுத்தேன். அவர் ஆவேசத்தில் என் கண்களுக்கு கண்ணகி மாதிரியே தெரிந்தார். அந்த மூத்த நீதியரசர் மீது உச்சநீதிமன்றத்தில் அப்பெண் புகார் கொடுத்ததாக பிற்பாடு என் நண்பர் ஒருவர் சொன்னார். அதன்பிறகு நடந்தவை நானறியேன்.
அதெல்லாம் சரி.
இன்றும் நான் ஒன்றை மட்டும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
'நான் என் கடமையிலிருந்து தவறி விட்டேனோ? நான் வேறு என்ன செய்திருக்க வேண்டும்?'
As their counsel u have imparted the very rt. advice not to sign the papers.& that any so..rt of compulsion or coercion can not be used...the counsels duty ends there.when matters r stretched too far,aren t we crossing the professional limit?
ReplyDelete