Saturday, 27 February 2016

சொல்வதெல்லாம் உண்மை-9

பாகப்பிரிவினைக்காக ஒரு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு தோல்வியைத் தழுவிய ஒரு நபர் மேல்முறையீடு தாக்கல் செய்வதற்காக எங்கள் சட்ட அலுவலகத்திற்கு வந்தார். வழக்குக் கோப்பினைப் படித்தேன். ஏற்றுக் கொண்டேன். ஊதிய விவரங்கள் முடிவானது. செலவுத் தொகையும் பேசி ஒப்புக் கொள்ளப்பட்டது.

நீதிமன்றக்கட்டணம் இவ்வளவு என்று நான் சொல்வதற்கு முன்பாக ஒரு பெருந்தொகை உள்ளடக்கிய கரன்சிக் கட்டு ஒன்றை என்னிடம் நீதிமன்றக் கட்டணத்திற்காக அவர் கொடுக்க நான் திகைத்துப் போனேன். பொதுவாக வழக்கரோ,  எதிர்வழக்கரோ, யார் மேல்முறையீடு தாக்கல் செய்தாலும் வழக்கர் கீழமை நீதிமன்றத்தில் என்ன தொகையை நீதிமன்றக் கட்டணமாகச் செலுத்தினாரோ அதே கட்டணத்தையே தான் மேல்
முறையீட்டிலும் செலுத்தவேண்டும் என்பது சட்டம். ஒருவேளை வழக்கில் கோரப்பட்ட தொகைக்கு பின்வட்டி வழங்கப்பட்டிருந்தால் அசலோடு வட்டியும் சேர்த்து வரும் கூட்டுத்தொகைக்கு நீதிமன்றக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். மற்ற வழக்குகளில் கீழமை நீதிமன்றத்தில் என்ன நீதிமன்றக் கட்டணம் செலுத்தப்பட்டதோ அதே கட்டணம்தான்  அப்பீலிலும் செலுத்தப்படவேண்டும். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு.

ஆனால் அவர் தாக்கல் செய்ததோ ஒரு பாகப் பிரிவினைக்கான வழக்கு. அவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது செலுத்தப்பட்ட நீதிமன்றக்கட்டணம் ரூபாய் 750/- என்ற fixed court fee மட்டுமே. மேல்முறையீட்டிலும் அதே கட்டணத்தை அவர் செலுத்தினால் போதும். ஆனால் அவர் என்னிடம் கொடுத்த நீதிமன்றக் கட்டணத்திற்கான தொகையோ மிக அதிகம். எப்படி என்றால் அத்தொகை வழக்குச் சொத்தில் அவர் கோரியிருந்த பாகத்தின் மதிப்பின் மீது 7.5 %  என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்ட மிகப் பெரிய தொகை. அத்தொகையை கீழமை நீதிமன்றத்தில் தனது வக்கீல் மூலம் தாம் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தியதாகவும் அவர் என்னிடம் சொன்னார்.

அப்போதுதான் அவர் நன்றாக ஏமாற்றப்பட்ட விவரம் எனக்குப் புரிந்தது. அவரிடம் எப்படி
என்ன சொல்வது என்பது தான் எனக்குத் தெரியவில்லை.

எந்தக் கட்சிக்காரரும் பொதுவாக தான் நீதிமன்றத்தில் செலுத்தும் நீதிமன்றக்கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று அறியத் தலைப்படுவதில்லை. அப்படி அவர்கள் கேட்டால் தவிர பொதுவாக எந்த வக்கீலும் அந்த விவரங்களை அவர்களிடம் சொல்வதுமில்லை.

மாறாக மிகத் துல்லியமாகத் தங்கள் கட்சிக்கார்களிடம் நீதிமன்றக் கட்டணம் மதிப்பிடப்படும் முறையையும் செலுத்தப்படும் கட்டண விவரத்தையும் தெரிவிக்கும் வழக்குரைஞர்கள் பலர் உண்டு. ரசீது கொடுப்பவர்களும் உண்டு.

ஆனால் என்னிடம் வந்த நபரிடம் அவரது வழக்கறிஞரோ அல்லது அலுவலரோ, அவ்வழக்கிற்கு fixed court fee செலுத்தினால் போதும் என்பதைச் சொல்லாமல் ad valorem court fee என்ற அடிப்படையில் அவரது வழக்குச் சொத்தின் பணமதிப்பின் மீது percentage கணக்கில் பலமடங்கு அதிகமாக நீதிமன்றக் கண்டணமாக வசூலித்துவிட்டு fixed court fee மட்டும் நீதிமன்றத்தில் செலுத்தியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. அவர் வசம் இருந்த அவர் தாக்கல் செய்த வழக்குரை/பிராதின் நகலைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடியே அந்த நகலில் நீதிமன்றக்
கட்டணமாகச் செலுத்தப்பட்ட தொகையின் விவரம் தட்டச்சு செய்யப்படவில்லை. பேனா கொண்டும் அந்த column நிரப்பப்படாமல் blank ஆக இருந்தது. Decree copy யிலும் பார்த்தேன். ரூபாய். 750/- மட்டுமே செலுத்தப்பட்டதாக அதில் காணப்பட்டது.

என்ன செய்யலாம் என்று யோசித்தபடி அவரை மாலை வந்து என்னை சந்திக்கும்படி சொல்லி அனுப்பி வைத்தேன். கீழமை நீதிமன்றத்தில் பணியாற்றும் என் வழக்கறிஞர் நண்பரை அணுகி கீழமை நீதிமன்றத்தில் records sectionல் அந்த வழக்கிற்கான அசல் பிராது நகலைப் பார்த்துச் சொல்லக் கேட்டபோது அதில் ரூ.750/- என்ற தொகை தான் பேனாவினால் எழுதப்பட்டிருந்தது என்பது ஊர்ஜிதமானது.

நான் திகைத்துப் போனேன். அந்த வழக்குரைஞரோ நான் நன்கறிந்தவர்.

சிலர் தானே இப்படி? இதை ஏன் பெரிது படுத்தவேண்டும் என்று நினைத்தால் தவறு. தொழில் தர்மம் என்ற ஒரு குடத்துப் பாலில் இந்தத் தவறு ஒரு துளி நஞ்சாகாதா?

ஏன் இப்படியான பிறழ்வுகள்
நிகழ்கின்றன? தான் செலுத்தும் நீதிமன்றக் கட்டணத்திற்கு எவரும் ரசீது கேட்பதில்லை என்பதாலா?
வக்கீல்கள் சொல்வதை மறுபேச்சின்றி கட்சிக்கார்கள் அப்படியே நம்புகிறார்கள் என்பதாலா?  நீதிமன்றத்தில் செலுத்தும் நீதிமன்றக் கட்டணத்திற்கு சான்று பெற விதி உண்டே, நாம் செய்கிறோமா?

அந்த வழக்கறிஞரின் அச்செய்கை தவறானது தானே? அதை என் கட்சிக்காரரிடம் நான் சொல்லவா? வேண்டாமா? எனக்கு மனதுக்குள் மிகப்பெரிய போராட்டம்.

கேள்விகள்....கேள்விகள்.....
விடை பெற இயலாக் கேள்விகள்....

மாலை அவர் மீண்டும் அலுவலகம் வந்தார். நான் கோரியிருந்த ஊதியத்தில் முன்பணம்,  செலவுத் தொகை ஆகியவற்றோடு நீதிமன்றக் கட்டணத்திற்காக ரூபாய். 750/- மற்றும் அவரிடமிருந்து ரொக்கம் பெற்றுக்கொண்டேன். அவர் ஆச்சரியப்பட்டார்.

'என்ன சார்? இவ்வளவு கம்மியா மவுண்ட் போதுமா?  கேட்டார்.

'போதும் சார். இப்போ சர்க்கார்ல சட்டத்தைத் திருத்தியிருக்காங்களா, அதன்படி இவ்வளவு கட்டினா போதும்'. சொன்னேன்.

பொய்தான்.
பொய்மையும் வாய்மையிடத்து அல்லவா?

'நல்லா பாத்துட்டுச்  சொல்லுங்க சார். இவ்வளவு மவுண்ட் அப்பீலில் கட்டினா போதுமா? அப்புறமா அதிகமாக் கட்டுனு சொல்ல மாட்டாங்களே?' என்றார்.

உண்மையை உள்ளபடிச் சொல்பவர்களுக்கு சில சமயம் இப்படி அனுபவங்கள் ஏற்படுவதுண்டு. சிரித்தபடி அவரை அனுப்பி வைத்தேன்.

ஒன்று தோன்றுகிறது.

நீதிமன்றக்கட்டணத்தை ரொக்கமாக வங்கியிலோ அல்லது நேரடியாக நீதிமன்றத்திலோ செலுத்த
(Printing charges, Plan 
Fee, Commissioner Fee  Fine Amount போல) வகையில்லையே. ஏன்?

அவ்வாறு ரொக்கமாக நேரடியாகச்
செலுத்தும்படி சட்டத்தை ஏன் திருத்தக்கூடாது?

பதிவுத்துறையில் இவ்வசதி வந்து விட்டதாகக் கேள்வி. நீதிமன்றத்தில் ஏன் நடைமுறையில் இல்லை?

Atleast கட்சிக்காரருக்கு செலுத்திய தொகைக்கு ரசீதாவது கிடைக்குமே!

செய்வார்களா?

No comments:

Post a Comment