Sunday, 28 February 2016

சொல்வதெல்லாம் உண்மை-13

அடுத்து என்ன செய்ய என்று புரியாமல் தவிக்கும் தருணங்கள் நம் எல்லோருக்கும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட அப்படிப்பட்ட ஒரு அனுபவம் இது.

ஒருவர் ஒரு கத்தைக் காகிதங்களோடு என் அலுவலகம் வந்தார். 'பெரிய இடத்து' பரிந்துரை துணையுடன் வந்தார்.

தனது வழக்குரைஞர் மீது வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றார். 'நுகர்வோர் குறைதீர் மன்ற வழக்கென்றால் என்றால் அவ்வளவு சுலபமல்ல, எல்லா வழக்குரைஞர்- வழக்காடி பிரச்சினைகளும் நுகர்வோர் வழக்காகாதே' என்றேன்.  தீர்ப்பு தமக்கு சாதகமாக இல்லை என்றெல்லாம் குறை சொல்லி வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றேன். ஒருவேளை அந்த வழக்குரைஞர் அந்த வழக்கை நடத்தும் முறையிலும் தனது கடமையைச் செய்வதிலும் குறை இருந்தது என்றால் அதற்கு தக்க ஆதரவுகள் வேண்டுமே என்றேன்.
'அவ்வாறான வழக்கல்ல; அதற்கும் மேலே...' என்ற பீடிகையோடு ஆவணங்களைக் கொடுத்தார். படித்துப் பார்த்து விட்டு இந்த நிமிடம் வரை எந்த முடிவும் எடுக்காமல்  யோசித்தபடி( குழம்பியபடி?) இருக்கிறேன்.

அவருக்கு ஒரு சிவில் வழக்கு. எதிர் தரப்பு தன்னுடயை சொத்திற்கு நூதனப் பாத்தியம் கோருவதால் அச்சொத்து தனக்கு பாத்தியம் என்று அறிவிக்கக் கோரியும் அதில் உள்ள ஒரு கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்று தடையுத்தரவு கோரியும் அவ்வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார். இடைக்கால உத்தரவாக அந்தக் கட்டிடத்தை எதிர்தரப்பு இடிக்கக் கூடாது என்று ஒரு இடைக்கால தடை உத்தரவு அந்த நீதிமன்றம் தந்திருக்கிறது. ஆனால் அந்த உத்தரவை ஒரு குறிப்பிட்ட தேதி வரை மட்டுமே வழங்கி விட்டு அந்தத் தேதியன்று அந்த வழக்கை மறு வாய்தா ஏற்படுத்தியிருக்கிறார் அந்த நீதிபதி.

இந்தக் கட்சிக்காரரின் சோதனைக் காலம் அந்த வாய்தா தேதியன்று நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. வக்கீல் நலன் சம்பந்தப்பட்ட வலுவான காரணம் காட்டி அந்தப் போராட்டம். அந்த விவரம் அவருக்கு  தெரியாததால் அவர் அன்று நேரடியாக கோர்ட்டில் போய் ஆஜராகவில்லை.அவரது வக்கீலும் நீதிமன்றத்துக்குப் போகவில்லை.

அந்த நீதிபதியோ அந்த இடைக்காலத் தடை உத்தரவை மற்றொரு நாள் வரை நீட்டிக்கவுமில்லை. திரும்ப நீதிமன்றப் பணிகள் துவங்கிய போது இவரது வக்கீல் மன்றாடிக் கேட்டும் அந்த நீதிபதி அந்தத் தடையுத்தரவை நீட்டிக்க மறுத்துவிட்டார். அந்த நீதிமன்றம் அம்மனுவை சங்கதிகளின் அடிப்படையில் விசாரித்து அந்த தடை உத்தரவை நீக்கறவு செய்யவும் இல்லை. மனு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது.

ஆனால் எதிர் தரப்பில் அந்த தடை உத்தரவு நீதிமன்றத்தால் நீட்டிக்கப்படாததால் அந்த உத்தரவு இனியும் அமலில் இல்லை என்று சொல்லி காவல் துறை உதவியுடன் அதிரடியாக அச்சொத்தில் உள்ள கட்டிடத்தை முழுதும் இடித்துவிட்டார்.

எனது கட்சிக்காரருக்கு தன் வக்கீல் மீது அளவு கடந்த கோபம். அவர் அன்று கோர்ட்-ஐ பாய்காட் செய்யாமல் இருந்திருந்தால் இந்த அளவுக்கு தனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது, எனவே எல்லாவற்றுக்கும் தன் வக்கீலே முழுக் காரணம் என்று ஆத்திரம்.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லி பார் கவுன்சிலுக்கு நோட்டிஸ் அனுப்பியதி்ல் தனக்கு இதுவரை பதில் இல்லை என்கிறார்.

தன் வக்கீலுக்கு இழப்பீடு கோரி ஒரு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார். அந்த வக்கீலும் அனுப்பிய பதில் அறிவிப்போடு தான் உறுப்பினராக உள்ள பார் அசோஷியேஷன் மேற்சொன்ன நாளன்று அந்த நீதிமன்றத்தை பாய்காட் செய்ததற்கான தீர்மான நகலை இணைத்து அதன்படியே தான் அன்றைய தினம் நீதிமன்றத்தைப் புறக்கணிக்க வேண்டிவந்தது என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

அதோடு விடவில்லை இந்த நபர். வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வது சட்ட விரோதமானது என்ற ஒரு உச்சநீதிமன்ற தீர்முடிவைச் சுட்டிக் காட்டி ( யார் சொல்லிக் கொடுத்தாரோ?) மறுபடியும் வக்கீலுக்கு ஒரு ரிமைண்டர் அனுப்ப கடுப்பாகிப் போன அந்த வக்கீல் ஒரு மறுப்புரை அனுப்பி பாய்காட் அன்று தான் கோர்ட்டுக்குப் போயிருந்தால் தனக்கு பல 'அசம்பாவிதங்கள்' நடந்திருக்கும் என்றும் தான் பல பேரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகியிருப்பேன் என்றும் விளக்கம் அளித்து தான் தாக்கப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு என்றும் சொல்லியதோடு பாய்காட் அன்று தான் கோர்ட்டுக்குப் போனால் தமக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்றும் சொல்லிவிட்டு அந்தக் கைக்கட்டை இவருக்குத் திரும்பக் கொடுத்ததோடு தான் வாங்கிய மொத்த ஊதியத்தையும் திரும்ப இவரிடம் கொடுத்து விட்டார்.

இதில் சமாதானமடையாத இவர் அந்த வக்கீல் மேல் பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் தனது வீட்டை திரும்பக் கட்டும் செலவோடு நஷ்டஈடும் அவர் தரவேண்டும் என்று அவர் மீதும் சம்பந்தப்பட்ட பார் அசோஷியேஷன் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரி என்னிடம் ஆலோசனைக்கு வந்திருக்கிறார்.

உண்மையில் அன்றைய நடந்த நிகழ்வுகளுக்கும் அவருக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கும் யார் பொறுப்பு? யார் மீது தவறு?

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து விட்டு அதன் பிறகு அந்த மனுவில் விசாரணை ஏதும் ஏற்படாத போதும் இடைக்கால உத்தரவை நீட்டிக்காத நீதிபதி மீது தவறா?

வழக்கைத திறம்பட நடத்தித் தருகிறேன் என்று சொல்லி பைசா வசூல் செய்துவிட்டு பார் அஷோஸியேஷன் பாய்காட் தீர்மானம் போட்டவுடன் அன்றைய தினம் அந்த இடைக்கால உத்தரவை நீட்டிக்க நடவடிக்கை எடுக்காமல் வீட்டில் முடங்கிக் கொண்ட அந்த வக்கீல் மீதா?

நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் அறிவித்த பிறகு இத்தகைய உத்தரவுகளை நீட்டிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்காது போன அந்த ஊர் வக்கீல் சங்கத்தின் மீதா?

ஒரு வக்கீல் மீது இந்த மாதிரி புகார் வந்தால் என்ன நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்ற விதிகளை வரையறுக்க வேண்டிய பார் கவுன்சில்கள் மீதா?

தலை சுற்றவில்லை??

உங்கள் கருத்தில் இவர்கள் மீது அல்லது வேறு யார் மீது தவறு?அவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்?

என் கட்சிக்காரருக்கு என்ன பரிகாரம் தரப்படவேண்டும்?

No comments:

Post a Comment